பக்கம் எண்: - 46 -

யான் உள்ள நிலைமை அறிந்தால் அவர் தவறாமல் இங்கு வருவார்” என்று நம்பிக்கையோடு பாடினான். அந்த நம்பிக்கைக்கு ஏற்பப் புலவரும் வந்தார். சோழமன்னன் மாய்ந்தது கண்டு தாமும் அதே இடத்தில் உயிர் விட்டார். அவ்வாறே பொத்தியார் என்ற புலவரும் அந்த அரசனுடைய பிரிவுக்காக வருந்தி உண்ணா நோன்பு கிடந்து உயிர் விட்டார். பிசிராந்தையார், பொத்தியார் ஆகிய இரு புலவர்களும் அந்த நிகழ்ச்சியின்போது பாடிய பாட்டுகளும் புறநானூற்றில் உள்ளன.

இரும்பொறை என்ற சேர அரசனுக்கும் செங்கணான் என்ற சோழனுக்கும் இடையே பகை மூண்டு போராகியது. போரில் சேரன் சிறைப்பட்டான். சிறையில் மான உணர்ச்சி மிகுந்தவனாய்ச் சேரன் உணவும் உண்ணாமல் நீரும் பருகாமல் இருந்தான். ஒரு நிலையில் நீர்வேட்கையால் மிக வாடி வருந்தி, ‘தண்ணீர்’ என்று வாய்தவறிக் கேட்டுவிட்டான். சிறைக்காவலர் தண்ணீர் கொண்டு வந்தனர். அதைக் கண்ட சேரன் தன் தவறு உணர்ந்து அந்த நீரைப் பருகாமல் பாடிய பாட்டு புறநானூற்றில் உள்ளது. “எங்கள் குடும்பத்தில் பிறந்த குழந்தை இறந்தாலும், உயிரோடு பிறக்காமல் தசைப்பிண்டமாகப் பிறந்தது ஆயினும், அதற்கும் வீரத்துக்கும் தொடர்பு இல்லையே என்று கருதாமல், அதையும் தவறாமல் வாளால் புண்படுத்திப் புதைப்பார்கள். அப்படிப்பட்ட வீரமரபில் பிற்நதவன் யான். என்னை நாய்போல் கட்டி இடர்ப்படுத்திச் சிறையில் வைத்த பகைவர் தந்த இந்தத் தண்ணீரை, மானம் இல்லாமல், வயிற்றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காக இரந்து கேட்டு வாழ்வது ஒரு வாழ்வா? அப்படி மானம் அற்ற வாழ்வு வாழுமாறு இந்த மரபினர் என்னைப் பெற்றெடுக்கவில்லை” என்று பாடி வைத்துவிட்டு உயிர் நீத்தான் மன்னன். இந்தப் பாட்டை அடிப்படையாகக் கொண்டு, இந்த நூற்றாண்டின் புலவர் சூரிய நாராயண சாஸ்திரியார் ‘மான விஜயம்’ என்ற பெயரால் செய்யுள் நாடகம் இயற்றியுள்ளார்.

அரச குடும்பத்துப் பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கி உயர்ந்த கொள்கைகள் உடையவர்களாய் வாழ்ந்தனர். பூதபாண்டியன் என்னும் அரசனின் மனைவி அத்தகைய சிறப்பு உடையவள். கணவன் இறந்தபோது, அவளும் உடன்கட்டை ஏறி மாயத் துணிந்தாள். அப்போது சான்றோர் சிலர் அரசியை அணுகி அவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள். “அந்தோ! சான்றோர்களே! நீயும் உடன்செல்க என்று அறிவுரை கூறாமல், வேண்டா என்று விலக்க முயல்கிறீர்களே! சுடுகாட்டில் அமைக்கப்பட்ட ஈமத்தீ உங்களுக்குப் பொல்லாததாக இருக்கலாம். எனக்கோ, என் கணவன் மாய்ந்த பிறகு, தாமரைபூத்த பொய்கையும் ஈமத்தீயும் ஒன்றே ஆய்விட்டன” என்று அந்த நிலையில் அவள் பாடிய பாட்டும் புறநானூற்றில் உள்ளது.