புலவருள்
ஒருவராகிய பிசிராந்தையார் அறிவுடைநம்பி என்ற பாண்டியனிடம் சென்றபோது அவனுக்கு
அறிவுரையாகப் பாடிய பாட்டு ஒன்று சிற்நத கருத்து உடையது. நாட்டை ஆளும் அரசன் வரி
வாங்குவதில் குடிமக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றி எடுத்துரைப்பது அது. இக்கால
அரசாட்சிக்கும் தேவையான கருத்து அதில் அமைந்துள்ளது. “வயலில் விளைந்து முற்றிக்
காய்ந்த நெல்லை அறுத்து அரிசியாக்கிச் சமைத்து உணவாக்கிக் கொடுத்தால், சிறிதளவு
நெல்லும் யானைக்குப் பலநாள் உணவாகும். ஆனால் யானை தானே வயலுக்குள் சென்று நெற்பயிரையே
தின்னத் தொடங்கினால் நூறு வயல்களே ஆயினும் அழிந்து போகும்; வாயில் உணவாகப் புகுவதைவிடக்
காலால் அழிவது மிகுதியாகும். அறிவுடைய அரசன் முறை அறிந்து குடிமக்களிடம் வரி பெற்றால்,
மக்களும் வாழ்வார்கள்; நாடும் தழைக்கும். அதிகாரிகளோடு கூடி இரக்கம் இல்லாமல்
ஆசைகொண்டு வரி வாங்க விரும்பினால், யானை புகுந்த வயல்போல் ஆகிவிடும்; அவனும்
வளம் பெற முடியாது; நாடும் கெடும்” என்னும் அழகான அறிவுரையைக் காணலாம்.
மோசிகீரனார் என்ற புலவர் சுருக்கமான முறையில்
எடுத்துரைத்த அறிவுரையும் இங்குக் கருதத்தக்கது: “உலக வாழ்க்கைக்கு அடிப்படையானது,
உயிரானது, நெல்லும் அல்ல; நீரும் அல்ல; நாட்டுக்கு உயிராக உள்ள ஆட்சிபுரியும் அரசனே.
அதனால் யான் இந்த நாட்டுக்கு உயிராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து நல்ல முறையில்
ஆட்சிபுரிவது அரசனுடைய கடமையாகும்.”
இத்தகைய வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றியனவாக இருப்பதால்,
புறப்பொருள் பாட்டுகளின் இலக்கியத் தரம் சிறிதும் குறையவில்லை. உண்மையோடு ஒட்டிய
கற்பனையாக இருப்பினும், அவற்றின் சுவை கவர்ச்சியானதாகவே உள்ளது. பாடிய புலவர்கள்
உளமார உணர்ந்து பாடிய பாட்டுகள் ஆகையால், அவற்றின் உணர்ச்சிகள் இன்றும் படிப்பவர்
உள்ளத்தைத் தொடுவனவாக உள்ளன. பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தமிழாக இருந்தபோதிலும்,
வாக்கிய அமைப்புப் பெரும்பாலும் மாறாமல் இருத்தலால், அந்த உணர்ச்சிகளை எட்டிப்பிடித்தல்
எளிதாக உள்ளது. இக்காலத்தார்க்கு எளிதில் விளங்காத அருஞ்சொற்கள் பல இருந்தபோதிலும்
அவை எல்லாம் தமிழ்ச்சொற்களே ஆகையாலும், இன்று வழங்கும் தமிழ்சொற்களோடு தொடர்பு
உடையவை ஆகையாலும், சில பாட்டுகளைக் கற்றுப் பழகிவிட்டவர்களுக்கு அந்த இடர்ப்பாடும்
நீங்கிவிடுகிறது. பல ஆண்டுகள் காணாமல் இருந்து கண்ட
|