இனிதுஎன
மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது
என்றலும் இலமே; மின்னொடு
வானம்
தண்துளி தலைஇ ஆனது
கல்பொருது
இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப்
படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப்
படூஉம் என்பது திறவோர்
காட்சியின்
தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை
வியத்தலும் இலமே;
சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே.
வாழ்க்கையிலே பூங்குன்றனார் பெற்ற உயர்ந்த தெளிவை இங்கே
உணர்த்துகிறார். தத்துவ ஞானிகள் கண்ட சிறந்த முடிவை எளிய முறையில் தெளிவுற உணர்த்தும்
பாட்டு இது. “சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. எல்லாம் நம் ஊரே. உறவினர்
என்று சிலர் மட்டும் இல்லை. மக்கள் எல்லாரும் உறவினர்களே. தீமையும் நன்மையும்
யாரோ நமக்குச் செய்வனவற்றால் வருவன அல்ல. துன்புறுதலும் ஆறுதல் பெறுதலும் அவ்வாறே
பிறரால் வருவன அல்ல. சாதல் என்பதும் புதுமையானது அல்ல. வாழ்தல் இன்பமானது என்று
யாம் மகிழ்ந்தது இல்லை. வெறுப்பால் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை.
பெரிய ஆற்றில் நீர் ஓடும் வழியில் ஓடும் தெப்பம்போல, உயிர்வாழ்க்கை இயற்கைமுறை
வழியே நடக்கும் என்பதைத் தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆகையால் உலகில்
பிறந்து வாழ்வோரில், சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை; பெரியோரை வியந்து
போற்றியதும் இல்லை.” இவ்வாறு பூங்குன்றனார் பாடியுள்ள பாட்டில் வாழ்க்கை
அனுபவத் தெளிவைக் காண்கிறோம். உயர்ந்த உணர்வுக்கு அழகிய நிலையான வடிவம் தருவது
பாட்டு என்றால், இதுவும் அத்தகைய இலக்கியச் செல்வம் ஆகும்.
இத்தகைய அரிய அனுபவ உண்மைகளும் வாழ்க்கையோடு இயைந்த
கற்பனைகளும் போற்றத்தக்க கலை வடிவங்களும் கொண்ட பாட்டுகள் பல உள்ளன. இருபது நூற்றாண்டுகள்
கடந்து வாழும் கலைச்செல்வம் என்று அவற்றை அறிஞர் போற்றிவருகின்றனர்.
புறநானூற்றில் வீரம் கொடை ஆகிய பண்புகளும் செயல்களும்
கடந்த வேறு பல பொருள்களைப்பற்றிய பாட்டுகள் பல உள்ளன. வயது நிரம்பி முதுமையால்
தளர்ந்தவன் ஒருவன் தடி ஊன்றித் தடுமாறி நடந்து இருமி இருமிப் பேசும் பேச்சு ஒரு பாட்டில்
உள்ளது. கழிந்த காலத்தை நினைந்து வருந்திப் பெருமூச்சு விடும் நிலையில், அவனுக்குத்
தன் இளமைக் காலத்து விளையாட்டுகள் நினைவில் வந்து போகின்றன. “மணல்மேட்டிலே
பாவை வைத்துப் பூச்சூட்டி விளையாடும் சிறுமியரோடு கைகோத்து அவர்களின்
|