பக்கம் எண்: - 50 -

அசைவுக்கு ஏற்றவாறு அசைந்து கரவு ஒன்றும் இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த காலம் அது. நீண்டு உயர்ந்த மருத மரத்தின் கிளைகளில் ஏறி, குளத்தின் அருகே தாழந்து படிந்திருக்கும் கிளையில் வந்து, அங்கிருந்து குளத்து நீரில் துடும் எனக் குதிப்பேன். கரையில் உள்ளவர்கள் என் செயலைக் கண்டு மருள்வார்கள். குளத்துநீர் அலைகளாப் பிதிரும். துடும் என்று நீரில் பாய்ந்து குளத்தின் அடியிலிருந்து மணலைக் கொண்டுவந்து காட்டிய இளமை இப்போது எங்கே சென்றதோ! என் இன்றைய நிலை இரங்கத்தக்கதாக ஆகிவிட்டது. இந்தத் தடியை ஊன்றி நடுக்கத்தோடு நடக்கவேண்டி ஆகிவிட்டது. இருமலுக்கு இடையே சில சொற்களே பேசக்கூடிய நிலை வந்துவிட்டது. கழிந்துபோன இளமையை நினைந்தால் இரங்கத்தக்கதாக உள்ளது” என்கிறான் அந்த முதியவன். பெயர் தெரியாத புலவர் ஒருவர் பாடிய பாட்டு இது.

நக்கீரனார் பாடியதாக உள்ள மற்றொரு பாட்டு பொதுவான உண்மையை எடுத்துரைக்கிறது : “இந்த உலகத்தைத் தமக்கே உரிமையாகக் கொண்டு ஆட்சி புரிந்த ஒப்பற்ற அரசர்க்கும், இரவும் பகலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடும் வேடர்க்கும் பொதுவாகப் பார்த்தால், உண்பது ஓரளவு உணவு; உடுப்பவை இருவகை ஆடைகள். மற்ற நுகர்ச்சிகள் எல்லாம் ஏறக்குறைய ஒருதன்மையானவைகளே. ஆகவே, செல்வம் பெற்றதன் பயன் ஈதல் ஒன்றே. பிறர்க்கு ஒரு பொருளும் கொடுக்காமல், எல்லாம் நாமே அனுபவிப்போம் என்று கொண்டால், நம்மை விட்டுப் பலவும் தப்பிப் போய்விடும்” என்பது அந்தப் பாட்டின் கருத்து.

நாட்டை ஆண்ட அரசர்களும் தம் தாய்மொழியில் புலமை பெற்று விளங்கி, சிறந்த கருத்துகள் அமைந்த பாட்டுகள் பாடியிருக்கிறார்கள். புறநானூற்றில் உள்ள பல பாட்டுகள் இதை விளக்கி நிற்கின்றன. “அறுவடைக் காலத்தில் நிலத்தில் சிறு இடங்களை நாடி, வளைந்த கதிர்களின் தானியங்களைக் கொண்டுபோய் வளைகளில் நிரப்பிவைக்கும் எலிகளைப்போல் சிறு முயற்சி உடையவராய், பெற்றுள்ள தம் செல்வத்தைக் காத்துவருவதில் காலம் கழிப்பவர் சிலர். அப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து என் வாழ்நாள் செலவாகாமல் இருப்பதாக. அஞ்சாத காட்டுப் பன்றியைத் துரத்திச் செல்ல, அது இடப்பக்கத்தில் விழுந்த காரணத்தால் அதை அங்கே அன்று உணவாகக் கொள்ளாமல் விட்டு, மறுநாள் பெரிய மலைக்குகை எதிரொலிக்குமாறு முழக்கம் செய்து புறப்பட்டு ஆண் யானையை அடித்துத் தன் வலப்பக்கத்தில் விழுமாறு கொன்று உண்பது புலி. அந்தப் புலி போன்ற தளராத ஊக்கத்தோடு முயலும் சிறந்த மக்களின் உறவு பெற்ற நாள்கள் பலவாக எனக்கு வாய்ப்பனவாக” என்று சோழன் நல்லுருத்திரன் என்ற