அரசன்
பாடிய பாட்டு ஒன்று உள்ளது. அதில் அவன் கொண்ட உயர்ந்த குறிக்கோளைப் புலப்படுத்தி,
ஊக்கம் குன்றாத பெரிய முயற்சிகள் உடையவர்களைப் பாராட்டியுள்ளான்.
“பலவகைச்
செல்வங்களைப் படைத்து வளர்த்துக்கொண்டு ஒவ்வொரு வேளையிலும் பலரோடு சேர்ந்து உண்ணும்
வளம்பெற்ற பெருஞ்செல்வராக இருந்தபோதிலும், குறுக்கே வந்து குறுகுறு என்று நடந்து தம்
சின்னஞ்சிறு கைகளை நீட்டி உண்கலத்தில் உள்ள நெய்ச்சோற்றில் கையை இட்டும் தொட்டும்
எடுத்தும் துழாவியும் உடம்பில் படுமாறு சிதறியும் உள்ளத்தைக் கவர்ந்து மயக்கும் குழந்தைகள்
இல்லையானால், அந்தச் செல்வாக்கு வாழ்நாள் பயனற்றதே ஆகும்” என்று பாண்டியன் அறிவுடைநம்பி
என்ற அரசன்பாடியபாட்டு, குழந்தைச் செல்வத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றது.
இவ்வாறு புறநானூற்றில் உள்ள பாட்டுகள் பலவகை மக்களால் பாடப்பட்டவை; அரசர்கள்
பாடிய பாட்டுகளும் அவற்றில் உள்ளன. வாழ்க்கையின் பல்வேறு துறைகளைப்பற்றிய பாட்டுகளும்
இந்நூலில் உள்ளன. குழந்தைச் செல்வத்தைப் பாடுவது முதல் முதிய கிழவன் கழிந்த இளமையை
நினைந்து ஏங்கிப் பாடும் பாட்டு வரையில் பலவகைப் பாட்டுகளும் இதில் உள்ளன.
ஆற்றுப்படை
பழங்காலத்தில்
ஆற்றுப்படை என்பது ஒருவகை இலக்கியமாக வளர்க்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் இசை
பாடும் கலைஞர்களும் நாட்டியக் கலையில் வல்ல கலைஞர்களும் பலர் அந்தக் கலைகளைக்
குடும்பச் செல்வங்களாக வழிவழியாகப் போற்றிவந்திருக்கிறார்கள். அந்தக் கலைகளையே
தொழிலாகக் கொண்டு தனித்தனி இனங்களாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். யாழ் என்னும்
பழைய இசைக் கருவியும் குழல் முழவு முதலான மற்ற இசைக் கருவிகளும் கொண்டு இசையை வளர்த்த
ஆண்கள் பாணர். அவர்களுடைய மனைவியர் பலர் அந்தக் கலையில் வல்லவர்களாகப் (பாடினியர்,
பாட்டியர் என்று) விளங்கினாாகள். மனைவியர் சிலர் இசைக் கலையோடு நாட்டியக்கலையிலும்
வல்லவர்களாய்ச் சிறப்படைந்தாாகள். அவர்கள் விறலியர் எனப்பட்டர்கள். ஆண்களிலே
அவ்வாறு நாட்டியக் கலையில் தேர்ச்சிபெற்றவர்கள் கூத்தர் என்று கூறப்பட்டனர். வேடம்
தாங்கி நடித்துவந்தவர்கள் பொருநர். பாணர், விறலியர், கூத்தர், பொருநர் என்னும்
அந்தக் கலைஞர்களின் குடும்பத்தார் நகரங்களிலும் கிராமங்களிலும் வழிவழியாகக் கலைகளைப்
பல நூற்றாண்டுகளாக வளர்த்துவந்தார்கள். சங்ககாலம் முதல் ஆழ்வார் நாயன்மார்களின்
காலம்வரையில் (கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி.
|