பக்கம் எண்: - 52 -

ஒன்பதாம் நூற்றாண்டுவரையில்) அந்தக் குடும்பத்தார் கலைப் பொறுப்பை  ஏற்றுவந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் பல ஊர்கள் (இலங்கையிலும் யாழ்ப்பாணம் என்னும் பகுதி) அந்தக் கலைஞர்களின் குடிப்பெயரால் இன்றும் இருந்து வருகின்றன. கலையிலே ஓரளவு பெயரும் புகழும் பெற்று அரசரும் செல்வரும் மதிக்கும் அளவுக்கு உயர்வு பெறும்வரையில், வளமான வாழ்வு பெறுவதற்கு முடியாமல் வறுமையால் வாடுவது இயற்கை. அவ்வாறு வறுமையால் வாடும் நிலைமை இலக்கியக் கலையில் ஈடுபடும் புலவர்களுக்கும் உண்டு. இந்த உண்மையை உணர்ந்த புலவர்கள், தம் வறுமை தீரப் பொருள் உதவி செய்யும் செல்வரை அணுகினார்கள்; அவர்களைப் பாடினார்கள். அவர்களின் உதவி பெற்றபின், தம்மைப்போல் மற்றப் புலவர்களும் கலைஞர்களும் வறுமை தீர்ந்து வளமாக வாழ வழிகாட்டினார்கள். “இந்தக் கொடிய வறுமை தீர்ந்து நீயும் உன் சுற்றத்தாரும் நன்றாக வாழ்வதற்கு ஒரு வழி சொல்வேன்; இன்ன ஊரில் உள்ள தலைவன் இன்னானிடம் சென்று அவனைப் பாடுக. அவன் பரிசு தருவான். பெற்று மகிழ்க. நானும் அவ்வாறு அவனை அணுகியதால்தான் நன்மை பெற்றேன்” என்று அந்த நல்லுணர்ச்சியைப் பாட்டாகவே பாடுவது உண்டு. வழிகாட்டிப் பாடிய அந்தப் பாட்டு ஆற்றுப்படை எனப்பட்டது (ஆறு - வழி. படை - படுத்தல், சேர்த்தல்). புலவர் குடும்பத்தில் கலைத்தொண்டு செய்பவர் வாழ்வில் தனியே ஒருவராய் அந்தந்தக் கலைகளை விளக்க முடியாது. பக்கவாத்தியங்கள் இசைப்பவர்கள் முதலான பலருடைய உதவி அந்தக் கலைஞர்களுக்குத் தேவை. ஆகையால் பலர்சூழ வறுமையால் வாடும் காட்சி கலைஞர்களிடையே தெளிவாகப் புலப்படும். அதனால் அந்தக் கலைஞர்களின் வறுமையையும் அவர்களுக்கு வழிகாட்டும் கலைஞர்களின் ஆர்வத்தையும் புலவர்கள் சொல்லோவியமாக்கிக் காட்டுவதில் ஈடுபாடு கொண்டார்கள். அப்படிப்பட்ட ஆற்றுப் படைகளைப் பாடியவர்கள் இலக்கியத்தொண்டுக்கு உரிய புலவர்களே ஆனாலும், இசை முதலியவற்றில் தேர்ந்த கலைஞர் ஒருவர் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதுபோல் கற்பனை செய்து பாடினார்கள். தமக்கு உதவி செய்த வள்ளலின் பெயர் புகழ் முதலியன மட்டும் வரலாற்று உண்மைப் பகுதிகள்; அந்த ஆற்றுப்படையில் வருணிக்கும் பாணர் முதலானவர்களைப் பற்றிய குறிப்புகள் கற்பனைகள். கற்பனைகளே என்றாலும், புலவர்களின் வாழ்வில் இல்லாமல், நாட்டின் இசைக் கலைஞர்கள் முதலானவர்களின் வாழ்வில் அவை உண்மையாகவே காணப்பட்டவைகள். அவ்வாறு புலவர்கள் பாடிய ஆற்றுப்படைப் பாட்டுகள் பத்துப்பாட்டில் ஐந்து உள்ளன; பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய மற்றத் தொகைநூல்களிலும், பிற்காலத்து நூல்களிலும் ஆற்றுப்படைப் பாட்டுகள் உள்ளன.