பக்கம் எண்: - 53 -

பிற்காலத்துக் காவியங்களிலும் புராணங்களிலும் நான்கு வகையான நிலங்களின் (மலை, காடு, வயல், கடற்கரை) வருணனைகளும் ஆறு முதலியவைகளின் வருணனைகளும் மரபாக அமைந்துள்ளன. பத்துப்பாட்டில் ஆற்றுப்படைகளில் உள்ள நான்கு நில வருணனைகளே அந்த மரபுக்குத் தோற்றுவாய் எனலாம். அந்த ஆற்றுப்படைகள் 248 அடிமுதல் 500 அடிவரையில் உடையவை. புரவலனாகிய அரசன் அல்லது செல்வன் வாழும் ஊர்க்குச் செல்லும் வழியை விளக்கும்போது, அங்கங்கே உள்ள நிலப்பகுதிகளின் வருணனைகளை அமைத்துள்ளனர். அவை பழங்காலத் தமிழ்நாட்டைப் படம்பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை என்பது முருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு. 317 அடிகளால் அமைந்த இதுவே சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் எனலாம். பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப்பற்றிச் சில பாடல்கள் உள்ளன. ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்துள் உள்ளது. இன்றும் சில குடும்பங்களில் முருகனை வழிபடுவோர்க்கு அது பாராயணத்துக்கு உரியதாக உள்ளது. அக்காலத்தில் இருந்த முருகன் கோயில்களைப் பற்றியும், வழிபாட்டு முறைகளைப்பற்றியும் அறிவிக்கும் குறிப்புகள் இதில் உள்ளன. இதில் அமைந்துள்ள இயற்கை வருணனைகளும் சிறப்பானவை. முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோயில்பற்றியும், அதைச் சூழ்ந்த இயற்கை வளம்பற்றியும் முருகன் திருக்கோலம்பற்றியும், சூரனுடன் செய்த போர்பற்றியும் விளக்கங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியில் முருகனுடைய ஆறு திருமுகங்களின் குறிப்புகளும் பன்னிரண்டு கைகளின் செயல்களும் திருச்செந்தூர் என்னும் தலத்தின் சிறப்பும் விளக்கப்படுகின்றன. மூன்றாம் பகுதியில் முருகனை வழிபடும் முனிவர்களின் பெருமையும் பழனியில் வழிபாட்டுக்கு வரும் மகளிரின் இயல்பும் கூறப்பட்டுள்ளன. நான்காம் பகுதி திருவேரகம் என்னும் தலத்தில் வழிபடுவோரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஐந்தாம் பகுதியில் மலைநாட்டு மக்கள் குரவைக் கூத்து ஆடிச் சேவிக்கும் முறைகள் முதலியன எடுத்துரைக்கப்படுகின்றன. இறுதியில் ஆறாம் பகுதியில் முருகன் எழுந்தருளும் இடங்களும் அவனிடம் சென்று அருள்பெரும் முறையும் பழமுதிர்சோலையின் அருவியின் சிறப்பும் விளக்கப்படுகின்றன.

மார்பின்
என்பெழுந் தியங்கும் யாக்கையர் நன்பகல்