பக்கம் எண்: - 54 -

          

  பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்

என்னும் அடிகள் முருகனை வழிபடும் முனிவர்களைப் பற்றிவிளக்குவன. “மார்பின் எலும்புகள் எழுந்து தோன்றும் உடம்பை உடையவர்கள். பல பகல் உண்ணாமலே நோன்பால் கழித்தவர்கள். பகையையும் சினத்தையும் நீக்கிய மனம் உடையவர்கள். எல்லாம் கற்றவர்களும் அறிய முடியாத மெய்யறிவு பெற்றவர்கள். கற்றவர்களுக்கு எல்லையாக வல்ல தலைமை உடையவர்கள். ஆசையையும் கடுங்கோபத்தையும் நீக்கிய ஞானம் உடையவர்கள். துன்பம் சிறிதும் அறியாத மன உறுதி இயல்பாகப் பெற்றவர்கள்” என்று அவர்களின் இயல்பினை எடுத்துரைக்கின்றார் நக்கீரர்.

      நக்கீரர் இயற்கையின் அழகில் மிகவும் ஈடுபட்டவர் என்பதைத் திருமுருகாற்றுப்படை விளக்குவதுபோலவே அவர் பாடிய மற்றொரு நீண்ட பாட்டாகிய நெடுநல்வாடையும் விளங்குகிறது. திருமுருகாற்றுப்படையின் தொடக்கத்தில் கதிரவன் கடலில் எழும் காலைக் காட்சியைக் காண்கிறோம். பிறகு திருப்பரங்குன்றம் முதலான மலைகளின் வளங்களைக் காண்கிறோம். பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது. கடைசி 22 அடிகளில் அந்த அருவிவருணனை அழகாக அமைந்துள்ளது. முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு. அந்தப் பொருத்தம் பாட்டைப் படிப்பவரின் நெஞ்சைவிட்டு நீங்காது.

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது. 248 அடிகள் உடையது. பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன்கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப் பாட்டால் விளங்குகின்றன. பொருநர்கள் பொல்லாத வழியில் செல்லும்போது, வழிபறிக்கும் கொள்ளையில் ஈடுபட்ட கள்வர்கள் வந்துவிடுவார்களானால், யாழை எடுத்து இனிய இசை எழுப்பினால் அந்தக் கொடிய கள்வர்களின் மனமும் மாறிவிடும் என்றும், அவர்கள் தம் கையில் எடுத்துவந்த கொலைக் கருவிகளையும் விட்டுவிடுவார்கள் என்றும் கூறி இனிய இசையின் சிறப்பை இப் பாட்டு விளக்குகிறது. கலைஞர் குடும்பத்தின் தலைவன் “ஏழின் தலைவ” (ஏழிசையின் தலைவனே) என்று அழைக்கப்படுகின்றான்.