கந்தலுடுத்து
வறுமையால் வாடிய அந்தக் கலைஞர்களின் இன்னலைப் போக்கிச் சோழ அரசன் உயர்ந்த
ஆடைகளைத் தருவானாம். நூல்இழை சென்ற வழியைக் கண்ணின் பார்வை பின்பற்ற முடியாத
அவ்வளவு நுண்மையானது என்றும். பாம்பு உரித்த தோலைப் போன்றது என்றும் அரசனால் தரப்படும்
பட்டாடை புகழப்படுகிறது. கலைஞர்கள் அரசனிடம் விடைபெறும்போது, அணிகலன்களும் மற்றப்
பொருள்களும் பரிசாகப் பெற்று வருவார்களாம். அரசன் நான்கு குதிரைகள் பூட்டிய பெரிய
தேரைத்தருவானாம். அவர்களின் பின் ஏழடி நடந்து சென்று வழி அனுப்புவானாம். இவ்வாறு
விருந்தினர் பிரியும்போது ஏழடி நடந்துசென்று அனுப்புதல் இன்றும் தமிழர்களிடையே இருந்துவரும்
பழைய வழக்கம் என்பது இங்குக் கருதத்தக்கது.
சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
269 அடிகள் உடையது; பாணர் என்னும் இசைக் கலைஞர்பற்றிய பாட்டு அது. ஒரு பாணர் குடும்பத்தின்
வறுமை அதில் சொல்லோவியமாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் சுவர்கள் பழைய சுவர்கள்.
அங்கங்கே செல்லரித்தல் காணப்படுகிறது. கூரையின் கழிகள் சோர்ந்துவிழும் நிலையில்
உள்ளன. சமையலறையில் புழுதியும் அதில் பூத்த காளானும் காண்கிறோம். வறுமை அந்தக்
குடும்பத்தாரைமட்டும் அல்லாமல் அந்தக் குடும்பதைச் சார்ந்த நாயையும் விடவில்லை.
அந்த நாய் சமையலறையில் குட்டிபோட்டுள்ளது. கண் திறக்காத இளங்குட்டிகளுக்குத் தாய்ப்பால்
போதுமான அளவு இல்லை. தாய் நாயிடம் பால் குடிக்கக் குட்டிகள் அணுகும்போது, தாய்நாய்
குரைக்கின்றது. தன் மடியில் பால் இல்லாக் குறையால், குட்டிகளை அணுகவிடாமல் குரைத்து
அப்புறப்படுத்துகிறது. நாயின் தாய்மையுணர்ச்சியும் கெடக்கூடிய அளவுக்கு அங்கு வறுமை வாட்டுகிறது.
அந்தக் குடும்பத்தின் தலைவி பொறுப்புணர்ச்சி மிகுந்தவள். உணவுக்காகப் பெருமுயற்சி
செய்தும் ஒன்றும் கிடைக்காமையால், கிடைத்த வேளைக்கீரையைப் பறிக்கிறாள். அதை
வேகவைக்கிறாள். அதற்கும் சுவையூட்ட உப்பு கிடைக்கவில்லை. உப்பு இல்லாமல் வெந்த
கீரையை உண்ணப் பலர் காத்திருக்கிறார்கள். பலர்க்கும் அதைப் பரிமாறுகிறாள். அந்த
வறுமைக் காட்சி வெளியாரின்
கண்ணில் படக்கூடாதே என்று மான உணர்ச்சியால், தெருக்கதவைச் சாத்துகிறாள். இத்தகைய
மான உணர்ச்சி இருப்பதால், எவ்வளவு வறுமை வாட்டியபோதிலும், பிறரிடம் சென்று கை
நீட்டிப் பிச்சை கேட்பதில்லை. வள்ளலை நாடிச் செல்லும்போதும், பொருளுதவிவேண்டும்
என்று வாய்திறந்து கேட்பதில்லை. கண்டவரிடம் செல்வதில்லை. கலைஞர்க்கு உதவும் மனப்பான்மை
உண்மையாக உள்ள
|