பக்கம் எண்: - 72 -

சொற்களில் புலனாகிறது : “இவள் தெய்வமகளோ? மயிலோ? குழை அணிந்த பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகிறது.” சில நாள் கழித்துக் காதல் வளர்ந்தபின் அவன் கூறுகிறான் : “உடம்போடு உயிர்க்கு என்ன உறவோ, அதே உறவுதான் என் காதலியோடு எனக்கு உள்ள நட்பு. உயிர்க்கு வாழ்வுபோன்றவள் அவள்; அவளுடைய பிரிவு சாதல் போன்றது.”

கற்பனை நயம் மிகுந்த சொற்கள் இந்தப் பகுதியில் மிகுந்துள்ளன. காதலி கூறுவன கேட்போம் : “என் காதலர் என் கண்ணில் உள்ளார். கண்ணின் உட்பகுதியிலிருந்து அவர் நீங்குவதில்லை. நான் கண்ணை இமைத்தாலும் அதனால் அவர் வருந்துவதில்லை. அவ்வளவு நுட்பமானவர் என் காதலர். அவர் கண்ணுள் இருப்பதால் என் கண்ணுக்கு மை எழுதுவதும் இல்லை. மை தீட்டினால் அது அவரை மறைத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். காதலர் என் நெஞ்சில் உள்ளார். அதனால், சூடான பொருள்களை உண்ண அஞ்சுகிறேன். சூடானவற்றை உண்டால், அவர்க்கு வெப்பமாக இருக்குமே என்றுதான் அஞ்சுகிறேன்.”

இவர்களுடைய மறைவான காதல் மெல்லச் சிலர்க்குத் தெரிகிறது; பலர்க்கு எட்டுகிறது. தாயும் மெல்ல அறிகிறாள்; கடுஞ்சொல் கூறுகிறாள். அப்போது காதலி கூறுவன என்ன? “ஊரார் தூற்றிப்பேசும் சொற்கள் என் காதல் நோய்க்கு எரு ஆகின்றன. அன்னையின் சுடுசொற்கள் இந்தப் பயிர்க்கு நீர் ஆகின்றன. இப்படித் தூற்றிப் பேசுவதால் என் காதலை அடக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்கள். தவறு! அது நெய்யால் நெருப்பை அவித்துவிட எண்ணுவது போன்றதே.”

காதலன் வெளிநாட்டுக்கு ஒரு கடமையை முன்னிட்டுப் பிரிந்து போக எண்ணுகிறான். அதைத் தன் காதலியிடம் தெரிவிக்க முயல்கிறான். அவளுடைய மறுமொழியைக் கேட்போம் : “என்னை விட்டுப் பிரியாத செய்தியானால் என்னிடம் சொல்லுங்கள். அல்லது, பிரிந்து விரைவில் திரும்பி வருவேன் என்று சொல்லும் செய்தியானால், இப்போது என்னிடம் சொல்லவேண்டா. நீங்கள் திரும்பி வரும்போது உயிரோடு வாழ்ந்திருக்க வல்லவர் யாரேனும் இருந்தால் அவர்களிடம் சொல்லுங்கள்.” அவள் தனக்குள் சொல்லிக் கொள்கிறாள் : “என்னிடம் வந்து தம் பிரிவைப்பற்றிப் பேசும் வன்மையான நெஞ்சம் அவர்க்கு இருக்குமானால், அப்படிப்பட்டவர் திரும்பிவந்து அருள்வார் என்று ஆசைப்படுதல் வீண்.” பிரிந்தபின் அவள் படும் துன்பங்கள் நெஞ்சம் உருக்குவன : “நான் இப்போது ஏன் உயிர் வாழ்கிறேன்? அவரோடு யான் அன்பாக வாழ்ந்திருந்த நாட்களை நினைந்து ஏங்குவதற்காக உயிர் வாழ்கிறேன். மறந்தால் என்ன ஆவேனோ? மறக்க முடியவில்லை. நினைந்தாலும் நெஞ்சம் சுடுகின்றது. நனவில் அவர் வந்து அன்பு செய்யவில்லை. அப்படிப்பட்டவர் கனவில் வரக் காண்கிறேன்.