பக்கம் எண்: - 73 -

அதனால் தான் என் உயிர் இன்னும் உள்ளது. நனவு என ஒன்று இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கனவிலே என் காதலர் நீங்காமல் என்னோடு இருப்பாரே! காலைப்பொழுதுக்கு யான் என்ன நன்மை செய்தேன்? மாலைப்பொழுதுக்கு என்ன தீமை செய்தேன்? மாலைப்பொழுது இவ்வாறு பிரிவுத் துன்பத்தை வளர்க்க வல்லது என்பதை என் காதலர் என்னைவிட்டு நீங்காமல் இருந்த காலத்தில் யான் அறிந்ததில்லை. காலையில் என் நோய் அரும்பாக இருக்கிறது. பகலெல்லாம் முதிர்ந்த அரும்பாக - போதாக - உள்ளது; மாலை வந்ததும் இந்த நோய் மலர்ந்துவிடுகிறதே, நெஞ்சமே! நீ அவரை நாடிச் செல்கிறாய்! செல்லும்போது என் கண்களையும் உன்னுடன் அழைத்துக்கொண்டுபோ. இவை அவரைக் காணவேண்டும் என்று என்னைப் பிய்த்துத் தின்னுகின்றன.”

இவ்வாறு காமத்துப்பால் முழுவதும், நாடகப்போக்கில் காதலனையும் காதலியையும் பேசச் செய்து திருவள்ளுவர் தாம் மறைந்திருக்கின்றார். காதல் உணர்ச்சிகளையும் கற்பனைகளையும் நாடகமேடையில் காண்பதுபோல் உணர்கிறோம். உணர்ச்சிகளுக்கும் கற்பனைகளுக்கும் அழகான வடிவங்கள் அமைகின்றன.

முதல் பகுதியாகிய அறத்துப்பாலில் அறத்தின் சிறப்பைத் திட்பமாக எடுத்துரைத்துக் கற்பவரின் நெஞ்சில் பதியுமாறு செய்வதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. நெறிதளராத அறவோராக விளங்கி, உணர்ச்சிவயப்படாமல், கற்பனைக்கு இடம் தராமல் நடுநிலையில் நின்று தாம் உணர்ந்த உண்மைகளைத் தெளிவாக விளக்குகிறார். இரண்டாம் பகுதியாகிய பொருட்பாலில் உலக வாழ்க்கையின் இயல்புகளையும் நடைமுறைகளையும் ஆராய்ந்த அனுபவம் நிறைந்த அறிஞராக விளங்குகிறார். அவர் பல காலத்தும் பல துறைகளிலும் கண்டும் கேட்டும் அறிந்தவற்றை எல்லாம் தம் சிந்தனையால் தெளிய உணர்ந்து வகைப்படுத்திக் கூறுகிறார். மூன்றாம் பகுதியாகிய காமத்துப்பாலில்தான், திருவள்ளுவரின் கலையுள்ளத்தை நன்கு காணமுடிகிறது. இங்கு அவரை உபதேச மேடையிலோ பட்டி மண்டபத்திலோ அறிவுக் கூடத்திலோ நாம் காணவில்லை; இங்கு அவரைக் கவிதையரங்கத்தில் காண்கிறோம்; படைப்புத் திறன் மிக்க கவிஞராக நின்று இங்குக் குறள்மணிகளை இயற்றியுள்ளார்.

நெறியும் பண்பாடும்

அரசியல் முதலானவற்றைத் திருவள்ளுவர் விளக்குமிடத்திலும் அறத்தின் அடிப்படையை மறக்காமல் வற்புறுத்துகிறார். எப்படியாவது வெற்றி பெற்றிடவேண்டும், எப்படியாவது செல்வம் சேர்த்திடவேண்டும் என்பது அவருடைய கொள்கை அல்ல. நெறியறிந்தே அரசியல் கடமைகளைச்