செய்யவேண்டும் என்று வினைத்தூய்மை (செயல்
தூய்மை) வற்புறுத்துகிறார். செல்வம் சேர்க்கும் முயற்சியும் குற்றமற்ற வழியில் அமையவேண்டும்
என்கிறார். “புகழோடு நன்மையும் விளைக்காத செயலை எப்போதும் ஒதுக்கிடவேண்டும்.
தெளிந்த அறிவுடையோர் எவ்வளவு இடரும் துன்பமும் படுவதாக இருந்தாலும், இழிவான செயல்களைச்
செய்யமாட்டார்கள். பெற்ற தாயின் பசியைக் காண்பதாக இருந்தாலும், சான்றோர்கள்
பழிக்கும் செயல்களைச் செய்தல் கூடாது. பழியோடு கூடிப் பெறும் செல்வத்தைவிடச் சான்றோர்களின்
வறுமையே மேலானது. பிறரை அழ வைத்துவிட்டுக் கவர்ந்துகொண்ட பொருள் முதலிய எல்லாம்,
கொண்டவரை அழ வைத்துவிட்டுப் போய்விடும். நல்வழியில் பெற்றவை இழக்கப்பட்டாலும்,
பிறகு பயன் தருவன ஆகும். வஞ்சனை வழியால் பொருள் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை
மண்ணாலாகிய கலத்தில் நீர் நிரப்பிவைத்தல் போன்றது.”
இவ்வாறு வாழ்வின் பல துறைகளிலும் அறத்தின் அடிப்படையை வற்புறுத்தும்
திருவள்ளுவர், மூன்றாம் பகுதியாகிய காமத்துப்பாலில் காதலின் கட்டற்ற போக்கைக்
கூறுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. அங்கே அவர் கூறும் உணர்ச்சிகளும் கற்பனைகளும்
காதலரின் பண்பட்ட நெஞ்சத்தை விளக்குவனவாக உள்ளன. உடலின்பக் கிளர்ச்சியைமட்டும்
அவர் கூறவில்லை. உடலின் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட உயர்ந்த அன்பின் வளர்ச்சியைக்
கூறுகிறார். அதனால் காதல் பாக்களிலும் நல்ல பண்பாடு விளங்கக் காண்கிறோம். அப்படிப்பட்ட
தூய்மை இருக்கும் காரணத்தாலேயே, பிற்காலத்தில் ஆழ்வார்களில் சிறந்தவராகிய நம்மாழ்வார்
தம் பக்திப்பாடல்களில் திருக்குறளின் காதல் பாட்டுகளின் தொடர்களை அந்த வடிவிலேயே
அமைத்துள்ளார் :
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் |
நீராக நீளும்இந் நோய் |
என்பது திருக்குறள் (ஊரார் தூற்றிப் பேசும் பேச்சே எருவாக, தாயின் சுடு சொல்லே
நீராக என் காதல் நோய் என்னும் பயிர் செழித்து வளர்கிறது).
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து |
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள் |
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த |
காரமர் மேனிநம் கண்ணன் தோழீ கடியனே |
என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. ஆழ்வார் கண்ணனிடம்
கொண்ட பேரன்பைக் காதல் வாய்பாட்டால் விளக்கும் பாசுரம் இது.
|