உயர்ந்த காதல் நெஞ்சத்தைத் தூய வடிவில் விளக்கவேண்டும்
என்று திருவள்ளுவர் விரும்பினார் என்பதற்குப் பின்வருவதும் சான்று ஆகும். சங்கப் பாட்டுகளில்
காதல்பற்றிய ஐந்து திணைகளுள் மருதத் திணையில் காதலரின் ஊடல் (பிணக்கு) கூறப்படும்.
பிணக்கு ஏற்படுவதன் காரணமாக, காதலன் விலைமகள் வீட்டுக்குச் சென்று அவளோடு உறவு
கொண்டு வாழ்வதாகக் கூறப்படும். அங்குச் சிலநாள் தங்கியபின் திரும்பும்போது காதலி
அவனை அன்புடன் வரவேற்காமல், வெறுப்பும் சினமும் கொள்வதாகவும், பிறகு அவன் பணிந்து
வேண்டிக்கொண்டபின் சினம் தணிவதாகவும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.
இவ்வாறு ஆடல் பாடல் அழகு என்னும் கலைகளில் வல்ல பரத்தையரின் உறவு இல்லாமல் மருதத்
திணைபற்றிய காதல் பாடல்கள் அமைவது இல்லை. ஆனால் திருவள்ளுவர் புரட்சி செய்து அதை
மாற்றினார். அவர் திருக்குறளில் காட்டும் ஊடல் நிகழ்ச்சியில் பரத்தை (விலைமகள்)
உறவு இல்லை. இரண்டாம் பகுதியாகிய பொருட்பாலில் சூது, கள் ஆகியவற்றோடு விலைமகளின்
உறவையும் கடிந்து கூறியவர் திருவள்ளுவர். அவ்வாறு கடியப்பட்ட விலைமகளைக் கற்பனை நயத்திற்காகவும்
காமத்துப்பாலில் அமைத்துக் கூற அவருக்கு மனம் இல்லை. “என் காதலரிடம் தவறு
ஒன்றும் இல்லை ஆயினும் அவரோடு பிணங்கி ஊடுவதில் ஒரு பயன் இருக்கிறது. அவருடைய அன்பை
மிகுதியாகப் பெற்றுத் தரவல்லது அது” என்கிறாள் திருவள்ளுவரின் கற்பனைக் காதலி.
ஊடலும் அவளுக்குக் கற்பனை நயம் அமைந்த ஒரு விளையாட்டாக உள்ளது. தன் காதலன் அழகுமிகுந்தவனாய்
ஊரில் உலாவுவதால் பெண்கள் பலர் அவனைக் கண்டு அவனுடைய அழகைக் கண்ணால் அனுபவிக்கின்றார்களாம்.
ஆகையால், “உன் மார்பு பலர் கண்ணால் நுகர்ந்த மார்பு. ஆகையால் நீ பரத்தன்.
நான் உன்னை அணுகமாட்டேன்” என்கிறாள் காதலி. ஒருவர்க்குத் தும்மல் வந்தால்,
அதனால் ஒருவகை இடையூறும் இல்லாமல் வாழவேண்டும் என்று கருதி “நூறு ஆயுசு”
என்று வாழ்த்துவது இன்றும் தமிழ்நாட்டில வழக்கம். திருவள்ளுவரின் காலத்தில் அந்த
வழக்கம் இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு ஊடல் விளையாட்டு அமைகிறது. “நாங்கள்
ஒருவரோடு ஒருவர் பேசாமல் ஊடியிருந்தோம், அப்போது அவர் வேண்டுமென்றே தும்மினார்.
ஏன் தெரியுமா? நான் அவரை நீடுவாழ்க என்று வாழ்த்துக் கூறிப் பேசிவிட வேண்டும் என்பதற்காகத்தான்”
என்கிறாள் காதலி. அவன் தும்மியவுடன், அவள் நீடு வாழ்க என்று வாழ்த்துகிறாள். உடனே
அழுகிறாள்; “யாரோ உங்களை நினைக்கிறார்கள். அதனால் தான் உங்களுக்குத்
தும்மல் வந்தது. உங்களை நினைத்தவள் யார்?” என்று அழுகிறாள் (வேண்டியவர்கள்
தொலைவில் இருந்து நினைத்தால், நினைக்கப்பட்டவர்களுக்குத் தும்மல் வரும் என்பது
மக்களின் நம்பிக்கை).
|