பக்கம் எண்: - 76 -

அடுத்த முறை காதலனுக்குத் தும்மல் வருகிறது. வீணாக அழுகைக்கு இடம் தரக்கூடாது என்று கருதி அவன் தன் தும்மலை அடக்கிக்கொள்கிறான். அப்போதும் அவள் அழுகிறாள். “உங்களை யாரோ நினைப்பது எனக்குத் தெரியக் கூடாது என்று மறைக்கிறீர்கள். அதனால்தான் தும்மலை அடக்குகிறீர்கள்” என்று அழுகிறாள். ஒரு நாள் அழகான புதிய பூவை அவன் அணிந்துகொள்கிறான். “உங்கள் அழகை எவளுக்குக் காட்டுவதற்காக இந்தப் பூவைச் சூடிக்கொண்டீர்கள்?” என்று அவள் சினம் கொள்கிறாள். மற்றொரு நாள் வேறு ஏதோ நினைவில் ஆழ்ந்தபடியே காதலன் அவளை பார்க்கிறான்; “எவளை நினைத்துக் கொண்டு இப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று காதலி ஊடல் கொள்கிறாளாம். இவ்வாறு பழைய இலக்கியத்தில் மரபாக வந்த பரத்தையரின் உறவை வருணிக்காமலே, கற்பனையாக ஊடல் கொள்வதாக அமைத்தது திருவள்ளுவரின் தூய நெஞ்சத்தையும் புரட்சி மனப்பான்மையையும் காட்டுகிறது.

புது நோக்கு

சங்க இலக்கியத்தில் கள் குடித்தல் அரசரின் அரண்மனைமுதல் புலவர்களின் வீடுவரையில், மலைச் சோலைமுதல் வயல்புறம்வரையில் எங்கும் இருந்த பொதுவான வழக்கம். அது தீமையானது என்று அந்தப் பழைய பாடல்களில் கடிந்து கூறப்படவில்லை. இவ்வகையிலும் திருவள்ளுவர் புரட்சி செய்து, கள் குடித்தலின் தீமையை விளக்கியுள்ளார். பணம் கொடுத்து அறிவை மயக்கிக் கொள்வது எவ்வளவு பெரிய அறியாமை என்று வெறுக்கின்றார்.

பழைய பாடல்களில் வறுமையால் வாடியவர்களின் காட்சி ஒரு புறமும், அவர்களின் வறுமையைத் தீர்க்கவல்ல செல்வர்களின் வளமான வாழ்வின் காட்சி மற்றொரு புறமும் அமைந்திருக்கும். வறுமையின் கொடுமையைத் தெளிவாக எடுத்துக் கூறியும், இரந்து வாழும் பொல்லாத நிலையைக் கடிந்து கூறியும் திருவள்ளுவர் புரட்சி செய்துள்ளார். “வறுமையால் பலவகைத் துன்பங்களும் ஏற்படும். நல்ல கருத்துக்களை நன்றாக உணர்ந்து சொன்னாலும் வறியவர்களின் சொற்கள் செல்வாக்குப் பெறுவதில்லை. வறுமை வந்த நிலையில் பெற்ற தாயின் பார்வையும் வேறுபடும்.” வறியவன் தன் அனுபவத்தைச் சொல்கிறான்; “நெருப்பில் தூங்கினாலும் தூங்கலாம். வறுமையில் கண் மூடித் தூங்குவது அரிது அரிது. நேற்றுப்பட்டது போதும். நேற்றெல்லாம் கொல்வதுபோல் என்னை வாட்டிய வறுமை இன்று வருமோ” என்று வருந்துகிறான். இன்னொருவனிடம் சென்று கைநீட்டிக் கெஞ்சி இரந்து கேட்காமல் வாழும் வாழ்வு வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். பசுவுக்கு நீர் வேண்டும் என்று வாய் இல்லாத விலங்குக்காகவும் இரந்து கேட்பது, மனிதனுடைய நாக்கிற்கு மிக இழிவானது