பக்கம் எண்: - 77 -

என்கிறார். இரப்பவனுடைய துன்ப உணர்ச்சியை ஆழ்ந்து உணர்ந்து கூறுகிறார் :  “இவ்வாறு பிச்சை எடுத்து உயிர் வாழ வேண்டும் என்று படைத்திருந்தால், இந்த உலகத்தைப் படைத்தவனும் இரப்பவர்போல் அலைந்து கெடுவானாக!” புரட்சியான கருத்துகளை உணர்ச்சியுடன் வெளியிடும் குறள்மணிகள் இவை.

இல்லறம் துறவறம் இரண்டையும் கூறி இரண்டின் சிறப்புகளைம் விளக்கி இரண்டு நெறியையும் பெருமைப்படுத்துபவர் திருவள்ளுவர். “நல்ல நெறியிலே இல்வாழ்க்கை நடந்துவோன், வாழ்க்கையின் குறிக்கோளை அடைய முயல்வோர்க்குள் தலையானவன்.” “இந்த உலகத்தில் வாழவேண்டிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன், வானில் உள்ள தேவர்களோடு வைத்துப் போற்றத்தக்க பெருமையுடையவன்.” இவை இல்லறம்பற்றிய அவருடைய கருத்துக்கள். “எல்லாவற்றையும் முற்றத் துறந்தவர்களே தலையானவர்கள்; மற்றவர்கள், வாழ்க்கையில் மயங்கி மாயை வலையில் சிக்குண்டவர்களே.” இவ்வாறு துறவறத்தைப் பெருமைப் படுத்துகிறார். ஆனால், போலித் துறவிகளின் வேடத்தை மிக மிகக் கடுமையாகக் கடிந்துரைக்கிறார். “உயர்ந்த தவசியின் வேடம் பூண்டு தகாத செயல்களைச் செய்தல் புதரில் மறைந்து வேடன் பறவைகளைப் பிடித்தலைப் போன்றது.” “தன் நெஞ்சம் அறிந்த குற்றங்களை மறைவில் செய்து வாழ்ந்தால், வானம்போல் உயர்ந்த வேடம் பூண்டிருந்தாலும் அதனால் பயன் என்ன?” இவ்வாறு போலிகளின் வேடத்தைச் சாடுகிறார் அவர்.

திருக்குறளின் அறத்துப்பாலை ஊன்றிக் கற்றால், வாழ்க்கையின் படிப்படியான வளர்ச்சியைக் கூறி முழுமையைக் காட்டுவதை உணரலாம். இல்லறம் வளர்ந்து பண்பட்டுத் துறவுள்ளத்தில் செம்மைப்பட்டு மெய்யுணர்வால் ஒளிபெற்று விளங்கும் முழு வாழ்வை அங்குக் காணலாம். இல்லறம் துறவறம் இரண்டும் தொடர்புபட்டு விளங்குவதை உணரலாம். அன்பான மனைவியுடன் வாழ்ந்து நல்ல மக்களைப் பெற்று வளர்ந்து விருந்தினர்களை அன்புடன் போற்றிப் பலர்க்கும் உதவியாக ஒப்புரவாக வளரும் வாழ்க்கை, அன்பின் அடிப்படையிலிருந்து அருளின் நிறைவு பெற்று விளங்குதல் காண்கிறோம். அதனால் அன்பு என்னும் தாய் பெற்று வளர்க்கும் குழந்தையே அருள் என்கிறார்.

திருவள்ளுவர் சில இடங்களில் சில உண்மைகளை எடுத்துரைக்கும்போது, தாம் பல நூல்களை ஆராய்ந்து பெற்ற தெளிவு இது என்று கூறுகிறார்; “பெற்ற உணவைப் பகுத்துக் கொடுத்து உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுவதே நூலாசியரியர்கள் தொகுத்துக் கூறியவற்றுள் தலையானது” என்கிறார். சில இடங்களில் வாழ்க்கையை நன்கு ஆய்ந்து பெற்ற தெளிவு என்கிறார். “பெறத்தக்க நல்ல பேறுகளுள் நல்ல மக்களைப்