பெறுதல்போல் சிறந்த பேறுயாம் அறிந்தது வேறொன்று இல்லை.”
“உண்மை என்பதுபோல் நல்லவை, யாம் மெய்யாகக் கண்டவற்றுள் வேறு எவையும் இல்லை.”
“கயவர்கள் புறத்தோற்றத்தில் நன்மக்கள்போலவே உள்ளார்கள். இத்தகைய ஒப்புமையை
யாம் எங்கும் கண்டதில்லை.” இவ்வாறு அவர் தம் பரந்த வாழ்க்கையனுபவத்தால்
பெற்ற தெளிவை எடுத்துரைத்தல் காணலாம். ஆகவே பல நூல்களைக் கற்றும், பலவகை வாழ்க்கைத்துறைகளை
ஆராய்ந்தும் தாம் உணர்ந்த உண்மைகளை எடுத்துக் கூறினார் என்பது தெரிகிறது. போக்குவரத்து
குறைந்த பழங்காலத்தில் வாழ்ந்த அவர் இந்திய நாட்டில் சில பகுதிகளைமட்டுமே கண்டிருக்கக்கூடும்.
ஆயினும், அவருடைய நெஞ்சம் பரந்த பெரிய உலகமெல்லாம் அளாவி நின்றது. “வளி
வழங்கும் மல்லல் மாஞாலம்” (காற்று உலாவும் வளமான பெரிய உலகம்), “மாயிரு
ஞாலம்” (மிகப் பெரிய உலகம்) என்னும் தொடர்கள், உலகம் அளாவிய உள்ளத்தைப்
புலப்படுத்துகின்றன.
நாலடியார்
திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் பழைய நீதி நூல் நாலடியார் என்பது.
அது நான்கு அடிகள் கொண்ட வெண்பாவால் ஆகியது ஆகையால், அந்தப் பெயர் பெற்றது. நானூறு
செய்யுள்கள் கொண்டது. திருக்குறள் இரண்டு அடிகளால் ஆகியது; நாலடியார் நான்கு அடிகளால்
ஆகியது. இந்த அடிக் கணக்கை வைத்து இரண்டு நூலையும் ஒருங்கே போற்றும் பழமொழி ஒன்று
உண்டு. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’
என்பது அந்தப் பழமொழி.
இந்த நூலின் செய்யுள்கள் பலரால் பாடப்பட்டவை. இவை பாடப்பட்டதுகுறித்துப்
பழைய கதை ஒன்று வழங்கிவருகிறது. பல மலைகளின் சமண முனிவர்கள் எண்ணாயிரம் பேர்
வாழ்ந்து வந்தார்களாம். அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் பஞ்சமும் வறட்சியும் ஏற்படவே,
அவர்கள் பாண்டியநாட்டில் மதுரைக்கு வந்தனர். பாண்டியனுடைய உதவி பெற்றுத் தமிழ் ஆராய்ச்சியில்
காலத்தைச் செலவிட்டனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம் நாட்டில் பஞ்சம் தீர்ந்ததாகச்
செய்தி அறிந்து தம் இருப்பிடங்களுக்குத் திரும்ப எண்ணினர். பாண்டிய மன்னன் அவர்களைப்
பிரிந்து செல்ல இசைவு தராமல் தயங்கினான். அந்தச் சமண முனிவர்கள் எண்ணாயிரவரும்
ஆளுக்கு ஒரு வெண்பா எழுதித் தம் இருக்கைகளில் வைத்துவிட்டு ஒரு நாள் இரவில் சொல்லாமல்
புறப்பட்டுச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் பாண்டியன் செய்தி அறிந்து மிக
வருந்தினான். அவர்களின் பிரிவுக்காக நொந்த மனத்தோடு, அந்தப் பாடல்கள் எழுதிய
ஏடுகளை
|