கரும்பின் சக்கைகள் அடுப்பில் இடப்பட்டு வேகும் போது துயரப்படுவதில்லை.
நிலையில்லாத இந்த உடம்பையும் நன்மைக்காக உழைக்கச்செய்து இதன் பயனைக் கொண்டவர்கள்
எமன் வரும்போது துயரப்படுவதில்லை” என்னும் கருத்து உடைய பாட்டு, ஓர் உவமையை
நயமாக அமைத்து அழகிய சொல்லோவியமாக விளக்குதல் காணலாம்.
மற்ற நூல்கள்
நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் என்பவை நூறு நூறு செய்யுள் கொண்ட
நீதிநூல்கள். ஏலாதி என்பதும் நூறு செய்யுள் உடையதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது
ஆகியவை நாற்பது நாற்பது செய்யள் உடைய நீதிநூல்கள்.
பழமொழி நானூறு என்பது நாலடியார்போல் நானூறு செய்யுள் கொண்டது. ஒவ்வொரு
செய்யுளின் இறுதியிலும் அது கூறும் நீதிக்கு ஏற்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆகவே, இந்த
நூலால் நீதிகளை உணர்வதுமட்டும் அல்லாமல், அந்தக் காலத்தில் வழங்கிய நானூறு பழமொழிகளையும்
அறிய முடிகிறது.
ஆசாரக்கோவை அந்தக் காலத்தில் போற்றப்பட்டிருந்த ஒழுக்கவிதிகள் பலவற்றை
ஓதுகின்றது. முதுமொழிக்காஞ்சி திட்பமான சிறு சிறு தொடர்களில் நீதிகள் பலவற்றை
உணர்த்துகிறது. மற்றுமொரு நீதி நூல், நாற்பத்தைந்து செய்யுள்களால் நீதிகளை உணர்த்தும்
இன்னிலை என்பது.
கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது
என்பவை காதல்பற்றிய பாட்டுகள் கொண்ட நூல்கள். கைந்நிலை என்ற நூலையும் அவற்றொடு
சேர்த்து எண்ணுதல் உண்டு. சங்க நூல்களில் உள்ள அகப்பொருள் (காதல்) பற்றிய பாட்டுகளைத்
தழுவியே இவை பெரும்பாலும் இயற்றப்பட்டிருக்கின்றன. புதுமை இல்லை; சில இடங்களில்
உயர்வு நவிற்சி மிகுந்துள்ளது. சங்கப் பாட்டுகள் அகவல், கலிப்பா, பரிபாட்டு என்னும்
செய்யுள் வகைகளால் அமைந்தன. இவை வெண்பாவால் இயற்றப்பட்டவை.
களவழி நாற்பது என்னும் நூல், தமிழ்நாட்டில் கழுமலம் என்ற இடத்தில் நிகழ்ந்த
போர்பற்றியது. அது சேரனும் சோழனும் ஆகிய அரசர் இருவர்க்கு இடையே நிகழ்ந்த போர்.
சேரன் தோல்வியுற்றதாகவும், அவன் சிறையில் வைக்கப்பட்டபோது அவனை மீட்பதற்காக
அவனுடைய அவைக்களத்துப் புலவர் இதனைப் பாடியதாகவும் கூறப்படுகிறது. இதன் நாற்பது வெண்பாக்களும்
போர்க்களத்தைப்பற்றியும் சோழ அரசன்பெற்ற வெற்றியைப்பற்றியும் எடுத்துரைக்கின்றன.
|