இந்தப் பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்ட காலத்தில் சைனர்களும் பௌத்தர்களும்
சமயத்தொண்டு கல்வித்தொண்டு இரண்டையும் இணைத்தே செய்துவந்தார்கள். அந்தத் துறவிகள்
தங்கியிருந்த மடங்கள் பள்ளிகள் எனப்பட்டன. அவை கல்வி வளர்க்கும் நிலையங்களாகவும்
பயன்பட்டுவந்த காரணத்தாலேயே, இன்றுவரையில் பள்ளி என்ற தமிழ்ச்சொல் கல்விநிலையத்தைக்
குறிக்கும் சொல்லாக வழங்கிவருகிறது. சைன முனிவர்கள் தமிழில் பல இலக்கிய நூல்களையும்
இலக்கண நூல்களையும் இயற்றியுள்ளார்கள். வச்சிரநந்தி என்னும் சைனர் நிறுவிய சங்கம்
தமிழ் வளர்ச்சிக்கு நல்ல தொண்டு ஆற்றி விளங்கியது. அதைச் சார்ந்திருந்த முனிவர்கள்
பல நூல்கள் படைத்து உதவினார்கள். அந்தச் சங்கம் இருந்த காலத்திலேயே நாலடியார்
முதலானவை தோன்றியிருக்கவேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். அந்தச் சங்கம்பற்றி
நன்றாக அறிந்த காரணத்தால்தான், இறையனார் களவியலின் உரையாசிரியர் ஆகிய நக்கீரர்
அதற்கு முன்பு மூன்று சங்கங்கள் இருந்திருக்கவேண்டும் என்றும், அகத்தியம் தொல்காப்பியம்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலியன அந்தச் சங்கங்களின் புலவர்களால் பாடப்பட்டிருக்க
வேண்டும் என்றும் அழகான கற்பனை செய்து எழுதியுள்ளார்.
தகடூர் யாத்திரை என்ற பெயரால் ஒரு போர்பற்றிய காவியம் ஒன்று பழங்காலத்தில்
இருந்துவந்தது. அது சங்ககாலத்து நூல் என்று கூறுவதற்குச் சில சான்றுகள் உள்ளன; சங்ககாலத்து
நிகழ்ச்சிபற்றிப் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று கூறுவோரும் உண்டு. சங்க
நூல்களில் புகழப்பட்டுள்ள அதியமான் என்ற அரசனின் தலைநகர் தகடூர் என்பது. தகடூரின்மேல்
சேரன் ஒருவன் படையெடுத்துப் போர்செய்து பெற்ற வெற்றி இந்நூலில் விளக்கப்படுவதால்
தகடூர் யாத்திரை என்று பெயர் பெற்றது. தகடூர் மாலை என்றும் இது கூறப்படும். உரைநடை
கலந்த செய்யுள் நூல் இது. இப்போது இந்நூலின் செய்யுள்கள் 44 மட்டுமே கிடைக்கின்றன.
அவை எல்லாம் சங்க இலக்கியம் போன்ற செய்யுள் நடை உடையனவாக உள்ளன. வீரச்சுவை
அந்தச் செய்யுள்களில் சிறந்து நிற்கிறது.
முத்தொள்ளாயிரம்
சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று அரசர்களையும் தொள்ளாயிரம் வெண்பாக்களில்
புகழ்ந்து காதலும் வீரமும் ஆகிய சுவைகள் மேம்பட அமைந்த பழைய நூல் முத்தொள்ளாயிரம்.
இப்போது கிடைக்கும் பாட்டுகள் நூற்றொன்பது. தமிழ்நாட்டு மூன்று அரசர்களும் இன்னார்
இன்னார் என்று அறியக்கூடியவாறு அவர்களின் இயற்பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. குடிப்பெயர்கள்
மட்டுமே உள்ளன. ஆகையால்
|