பொதுவாகச் சேரரையும் சோழரையும் பாண்டியரையும்
புகழ்ந்த பாட்டுகளாகவே உள்ளன. அந்த அரசர்களின் யானைப்படை முதலியவற்றின் பெருமையும்
வீரச்செயல்களும் புகழப்பட்டுள்ளன. பெண்கள் அவர்களைக் கண்டு காதல் கொண்டதாகப்
பாடும் பாட்டுகள் உள்ளன. பாடிய புலவரைப்பற்றியும் ஒன்றும் அறியப்படவில்லை. பாடல்கள்
கவிதை நடையில் தெளிவாக அமைந்துள்ளன. எல்லாம் சுவைமிக்க பாட்டுகளாக உள்ளன. காதல்கொண்ட
பெண்களின் ஏக்கத்தை உணர்த்தும் பாட்டுகள் கற்பனை நயம் மிகுந்தவை. “சிப்பிகளிலிருந்து
பிறக்கும் ஒளியான முத்துக்கள் கிடைக்கும் இடம் பாண்டியனுடைய துறைமுக நகரமாகிய கொற்கைமட்டும்
அல்ல; பாண்டியனுடைய குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பை எண்ணி ஏங்கும் பெண்களின் கண்களிலும்
முத்துக்கள் பிறக்குமே” என்பது ஒரு பாட்டு. பெண்கள் தம் காதலால் பாண்டியனை
நினைத்து ஏங்கி விடும் கண்ணீர்த் துளிகள் முத்துக்கள்போல் உதிரும் காட்சியை இவ்வாறு
புலவர் கற்பனை செய்து ஒரு பெண்ணின் வாய்ச்சொல்லாக அமைத்திருப்பதைக் காணலாம்
இப்பிஈன்று இட்ட எறிகதிர் நித்திலம் |
கொற்கையே அல்ல படுவது - கொற்கைக் |
குருதிவேல் மாறன் குளிர்சாந்து அகலம் |
கருதியார் கண்ணும் படும் |
பாண்டியனுடைய வீரத்தைப் புனைந்துரைக்க வேண்டும்
என்று விரும்பினார் புலவர். பகையரசர்கள் பாண்டியனைத் தங்கள் மனத்தில் எண்ணவும்
அஞ்சுகிறார்கள் என்பதைப் பின்வருமாறு நயமாகப் புலப்படுத்தினார்: “படம் எடுத்து
ஆடும் நாகப்பாம்பு வானத்தில் இடிக்கும் பெரிய இடிக்கு அஞ்சிப் புற்றினுள் ஒளிந்து
கொள்ளும். அதுபோல், போர்வலிமை மிகுந்த பாண்டியனுடைய சினம்மிகுந்த வேலைப்பற்றிப்
பகையரசர்கள் கனவு கண்டு அஞ்சி ஒளிப்பார்கள்” என்கிறார். அந்தப் பகைவர்கள்
பாண்டியனிடம் கொண்ட அச்சத்தால், எப்போது அவனுடைய படை வந்துவிடுமோ என்று ஒவ்வொரு
நாளும் நடுங்கி, மதில் கதவை எப்போதும் அடைத்து வைத்திருக்கிறார்களாம். போர்க்கு
ஆயத்தமாக யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் அணி செய்து நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்.
பாண்டியனுடைய பிறந்த நாளாகிய உத்திராட நாள் வந்தது. பிறந்த நாளைப் போற்றிப்
பாண்டியனுடைய வீரத்தைப் புகழவேண்டும் என்று விரும்பிய புலவர், பகையரசர்களைப் பார்த்து
எள்ளி நகையாடி ஊக்கம் ஊட்டுவது போல் ஒரு பாடல் பாடுகிறார். “பகையரசர்களே!
மதில் கதவுகளைத் திறந்துவிடுங்கள்; யானை தேர் குதிரைகளை அணிவகுக்காமல் விடுங்கள்.
அச்சமே வேண்டா. பாண்டியனுடைய பிறந்த நாளாகிய உத்திராட நாள் இது. இன்று பாண்டியன்
போர் செய்யும் வழக்கம் இல்லை” என்று சொல்லி, இன்று ஒரு நாள் தான் அவர்கள்
அஞ்சாமல் வாழக்கூடிய நாள் என்று அவர்களை இகழ்ந்தும் பாண்டியனைப் புகழ்ந்தும் பாடியுள்ளார்
:
கண்ணார் கதவம் திறமின் களிறொடுதேர் |
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர் |
தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாள் |
போர்வேந்தன் பூசல் இலன். |
|