|
பாடல்கள் பாடியிருப்பது போலவே, திருப்பெள்ளியெழுச்சி
மரபிலும் பாடியுள்ளார். அருள் திருப்பள்ளியெழுச்சி, சிவப்பிரகாச சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி,
சொரூபானந்த சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி, தத்துவப்பிரகாச நாயனார் திருப்பள்ளியெழுச்சி
எனப் பல பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியுள்ளார். ஒவ்வொன்றும் பத்துப் பத்துப்
பாடல்கள் கொண்டவை. எல்லாம் மேலே காட்டிய ஆழ்வார் நாயன்மார் பாடல்களின் பொருள்
அமைப்பையும் வடிவத்தையும் இசையமைப்பையும் அவ்வாறே பின்பற்றி அமைந்துள்ளன. சிதம்பர
சுவாமிகளின் முருகக் கடவுளைப்பற்றிப் பாடிய திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களும்
அவ்வாறே வடிவமும் இசையமைப்பும் பெற்றுள்ளன. தெய்வத்தின் ஊரும் பெயரும் மாறுகின்றனவே
தவிர, மற்றப் பொருளமைப்பு மாறுவதில்லை.
|
பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால் |
|
புன்மை இருட்கணம் போயின யாவும் |
|
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி |
|
எழுந்து விளங்கிய தறிவெனும் இரவி |
|
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன் |
|
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம் |
|
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே |
|
வியப்பிது காண்பள்ளி எழுந்தரு ளாயே |
இது பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி என்ற இந்த நூற்றாண்டில்
பாரதியார் பாடியதில் முதல் பாட்டு (பொழுது புலர்ந்துவிடல், துன்பமெனும் இருள் நீங்குதல்,
அறிவு என்னும் சூரியன் உதயமாதலால், பாரதத்தாயைத் தொழுது வணங்கத் தொண்டர்கள்
சூழ்ந்து நிற்றல், இன்னும் கண் விழிக்காமல் உள்ள தாயைப் பள்ளி எழுந்தருளுமாறு வேண்டுதல்).
பாட்டின் வடிவம், செய்யுளின் அடி சீர் அமைப்பு
எல்லாம் பன்னிரண்டு நூற்றாண்டுகளாக ஒரே வகையாக இருந்துவருகின்றன. அதற்கு முன்பும்
அப்படிப்பட்ட நாட்டுப் பாடல்கள் இருந்திருக்கவேண்டும் என்றும், அவைகளும் ஏறக்குறைய
அதே வடிவில் இருந்திருக்கவேண்டும் என்றும் கருதலாம். பொழுது விடிதல், கதிரவன் எழுதல்,
பலரும் வந்துக் கூடித் தலைவனின் அருளுக்காகவும் ஏவலுக்காகவும் காத்திருத்தல், கண்விழித்து
எழுமாறு வேண்டுதல் முதலிய பொருளமைப்பும் பழங்காலம்முதல் ஒரே வகையாக இருந்து வந்ததாகக்
கொள்ளலாம். பள்ளியெழுந்தருளாயே என்று பாட்டின் முடிவில் மகுடம் அமைந்திருப்பதிலும்
பல நூற்றாண்டுகளாக ஒரு பொதுமை காணலாம்.
|