பக்கம் எண்: - 140 -

 கோவை  

பாண்டிய அரசன் நெடுமாறனைப் புகழ்ந்து எழுதப்பட்ட நூல் பாண்டியக்கோவை என்பது. கி. பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. நூல் முழுவதும் இப்போது கிடைக்கவில்லை. முந்நூறு பாட்டுகள் அந்நூலுக்கு உரியவை என்று தொகுக்கப்பட்டுள்ளன. அந்தப் பாட்டுகள் இலக்கண நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. நூலாசிரியர் இன்னார் என்பதும் தெரியவில்லை.

கோவை என்பது இலக்கிய நூல்களுள் ஒருவகை. கோவை நூல்களுக்குள் பழையதாகக் கருதப்படுவது இது. கோவை என்றால் பல செய்யுள்களைத் தொடர்பு உடையனவாகக் கோத்தல் என்பது பொருள். சங்க காலத்தில் காதல்பற்றிய பாட்டுகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாமல் தனித்தனியே பாடப்பட்டுள்ளன. அவ்வப்போது தோன்றிய தனித்தனிக் கற்பனைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் வடிவம் தந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டவை. கோவை என்பது காதலர் இருவரின் காதல் உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஒரு வரலாறுபோல் படிப்படியாகக்காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கு நூல் ஆகும். பொதுவாக நானூறு காதல் துறைகள்பற்றி நானூறு செய்யுள்களால் பாடப்படுவது அது. காதலர் ஒருவரை ஒருவர் காண்பதுமுதல் திருமணத்திற்குப்பின் நடத்தும் வாழ்க்கை நிலைகள்வரையில் குழந்தை பெற்று வளர்த்தல், ஊடல் முதலியன உட்பட நானூறு துறைகளையும் ஒரு வாழ்க்கை வரலாறுபோல் தொடர்ந்து காட்டுவது கோவை. அந்தக் காதலர் சங்க இலக்கியத்தில் உள்ளவாறு கற்பனைக் காதலர்களே. காதலர் கண்ட இடம், பழகிய சோலை முதலியவற்றைச் சொல்லும்போதும், உவமைகளை அமைக்கும்போதும், ஓர் அரசனையோ வள்ளலையோ தெய்வத்தையோ புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த நானூறு பாட்டுகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம்பற்றி அந்தத் தலைவனுடைய மலை, நாடு, ஆறு, பண்பு, செயல்கள் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று புகழப்படும். அவ்வாறு அமையும் நூல்வகையே கோவை.

பாண்டிக்கோவையில் பாண்டியன் நெடுமாறனின் வீரம், கொடை, போர்க்களங்கள், வெற்றிகள் முதலியவை புகழப்படுகின்றன. மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் சிவபெருமான் போற்றிப் பாடப்படுகிறார். பிற்காலத்தில் இவ்வாறு வெவ்வேறு அரசர்களையும் வள்ளல்களையும் தெய்வங்களையும் புகழ்ந்து கோவைகள் பாடப்பட்டன. ஒரே வகை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்ட காரணத்தால், பெரும்பாலான கோவைகளில் புதுமையான படைப்புகள் குறைந்துவிட்டன. ஆகவே ஒரு சில கோவை நூல்களே காலத்தால் அழியாமல் காப்பாற்றப்பட்டன. அவைகள் காக்கப்பட்ட காரணம் அவற்றின் இலக்கியச் சிறப்பே ஆகும். புகழப்பட்ட தலைவர்களின் புகழ் மறைந்தவுடன் மற்றக் கோவை நூல்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு மறைந்தன.