பக்கம் எண்: - 333 -

நூல்கள் நல்ல வகையில் எழுதியிருக்கிறார்கள். பாரதியாரைப்பற்றிப் பத்மநாபன் முதலானவர்கள் வாழ்க்கை வரலாறுகள் விளக்கமாக எழுதியுள்ளார்கள். ‘வீரபாண்டியக் கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற நூல்களால் தமிழகத் தலைவர்களைத் தமிழர்க்கு நன்கு அறிவித்தவர் ம. பொ. சிவஞானம். ‘புதுமைப்பித்தன் வரலாறு’ எழுதியவர் ரகுநாதன். ‘தமிழ்த்தொண்டர் வீரமாமுனிவர்’ முதலிய வேறு பல வாழ்க்கை வரலாற்று நூல்களும் பாராட்டத் தக்கவை. பழைய நாயன்மார்களின் வரலாறுகளைத் தந்தவர் வேங்கடாசலம். ‘யான் கண்ட புலவர்கள்’ என்ற நூலில் பம்மல் சம்பந்த முதலியார் தாம் நேரில் கண்டு பழகிய புலவர்களின் வரலாறுகளை எழுதியுள்ளார்.

தம்முடைய வரலாற்றைத் தாமே எழுதும் கலை அருமையானது. அவ்வகையில் தமிழில் பல நூல்கள் இல்லை என்றாலும், சில நல்ல நூல்கள் இவ்வகையில் வழிகாட்டிகளாகச் சிறப்புடன் அமைந்துள்ளன. டாக்டர் சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’, திரு. வி. கலியாணசுந்தரரின் ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ ஆகியவை இலக்கியமாக நிலைபெற்றுவிட்டன. கவிஞர்களுக்குள் தன் வரலாறு இயற்றியவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. டாக்டர் சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ முற்றுப் பெறுவதற்கு முன்னமேயே அவர் மறைந்தமையால், அது 122 அத்தியாயங்களுடன் முற்றுப் பெறாத நூலாகவே நின்றுவிட்டது. ஆயினும் அது பாராட்டத்தக்க நூலாக உள்ளது. திரு. வி. க.வின் ‘வாழ்க்கை குறிப்புகள்’ அவர் காலத்துப் பலதுறை அறிஞர்கள், சான்றோர்கள், தொண்டர்கள், தலைவர்கள் முதலான எல்லோரைப்பற்றியும் குறிப்புகளும் செய்திகளும் நிறைந்த களஞ்சியமாக உள்ளது.

குழந்தை நூல்கள்

குழந்தைகள் படித்துப் பயன் பெறத்தக்க நூல்கள் தமிழில் நிறைய வெளிவருகின்றன. குழந்தைகள் வியப்பான கற்பனைகளை அறிவதில் ஆர்வம் நிரம்பியவர்கள். எந்த அறிவுத்துறையையும் உள்ளதை உள்ளவாறே எழுதினால், குழந்தைகள் கற்றுப் பயன்பெற முடியாது; அவற்றைக் கற்பதற்குக் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படாது. வியக்கத்தக்க பகுதியைமட்டும் எளியமுறையில் கதைபோல் அமைத்து அளித்தால்தான் குழந்தை மனம் ஏற்றுக் கொள்ளும்.

குழந்தைகளின் அறிவுவளர்ச்சிக்கு உதவும் நூல்கள் பல வெளியாகியுள்ளன. அவற்றின் நடையில் எளிமை இருப்பதோடு, குழந்தை மனத்துக்கு ஏற்ற கற்பனைத் தரமும் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. தி. ஜ. ர., சுந்தரவடிவேலர், பூவண்ணன், தெய்வசிகாமணி, தம்பி சீனிவாசன், வைத்தண்ணா முதலானவர்கள் இவ்வகை நூல்கள் அளித்தவர்கள். சிலர்