பக்கம் எண்: - 334 -

வளர்ந்த மக்களுக்குத் துப்பறியும் கதைகளையும் திடுக்கிடும் கதைகளையும் படைத்துத்தருவதுபோல் குழந்தைகளுக்காகவும் அவற்றைப் படைத்துத் தருகின்றார்கள். அவை நல்ல குழந்தையிலக்கியம் என்று கொள்ளத்தக்கவை அல்ல. பல தலைமுறைகளாக இருந்துவரும் இந்நாட்டின் பழைய கதைகளைக் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் எளிமையாக்கித் தரும் நல்ல நூல்களும் சில வெளியாகியுள்ளன. அழ. வள்ளியப்பா பெரியவர்களின் வாழ்க்கையில் அவர்களின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கதைபோன்ற முறையில் திரட்டித் தந்துள்ளார். அவருடைய ‘பெரியோர் வாழ்விலே’, ‘சின்னஞ் சிறுவயதில்’ முதலான நூல்களின் நடையில் குழந்தைகள் படித்து அறிந்துகொள்ளத் தக்க எளிமையும் இருப்பது பாராட்டத்தக்கது.

வளர்ந்தவர்களுக்காக எழுதப்படும் பலவகை நூல்களிலும் எளிய நடை என்பது இன்று தேவையானதாகிவிட்டது. சொற்களையும் வாக்கியங்களையும் எளிமையாக்கித் தரவேண்டும் என்பதே எளிய நடையின் நோக்கம். ஆனால் உயர்ந்த பொருளை நூல்களின் வாயிலாக அளிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. எழுத்தில் வழங்கப்படும் பொருள் படிப்பவர் உள்ளத்தை உயர்த்தவல்ல பொருளாய் இருக்கவேண்டும் என்பதே அறிஞர்களின் அவா. ஆனால் நூலை அச்சிட்டுப் பரப்புதல் என்பதும், ஓர் இதழில் எழுதி வெளியிடுதல் என்பதும் பலராலும் செய்யக்கூடியனவாக ஆகிவிட்ட காரணத்தால், சொல்லத்தக்க உயர்ந்தபொருள் இல்லாதவர்களும் எழுத்தாளர்களாய் முன்வந்து, சாரமற்றவற்றை எல்லாம் எழுதிப் பரப்ப முடிகிறது; தவறான கருத்தையோ, மட்டமான சுவையையோ எளிய நடையில் கவர்ச்சியாக எழுதிப் பரப்பிவிட முடிகிறது. உண்மை இல்லாதவற்றையும் உண்மைபோல் மயக்கி, உண்மையைவிடச் சுவையுடையதாக ஆக்கி இதழ்களில் வெளியிட முடிகிறது. ஆழ்ந்து சிந்தனை செய்பவர்க்குப் பயன் இல்லாதது என்று தோன்றும் கருத்துகளையும் பொழுதுபோக்குக்கு உரிய விருந்தாக அமைத்துச் சிந்தனை குறைந்தவர்களை மயக்கி அவர்களிடையே புகழ்பெற முடிகிறது. ஆகவே, எளிய தமிழ் நடையால் பலர்க்கும் பயன்படச் செய்யவேண்டும் என்ற முயற்சி, சிலர் கையில் தவறான போக்கிற்கு உதவுவதாகவும் மாறிவிடுகிறது. நடுநிலையாக நின்று உண்மையை எடுத்துரைக்கும் கட்டுரைகளை விட, விருப்பு வெறுப்புகளை எளிய நடையில் ஆணித்தரமாக வற்புறுத்திக்கூறும் கட்டுரைகள் கவர்ச்சி மிகுந்தவையாக ஆகிவிடுவதால், எளிய நடை நேர்மையாளர்களுக்குப் பயன்படுவதைவிட, மக்களை மயக்க வல்லவர்களுக்கு மிகப் பயன்படுவதாக உள்ளது. ஆகையால் பழங்காலத்தில் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இடையே எழுதும் நடையில் வேறுபாடு இருந்ததுபோல், இன்று நடுநிலையாளர்களுக்கும்