அணிந்துரை

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஓர் ஊழி அறிஞர்; தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; இலக்கியப் பெட்டகம்; வாராது வந்த மாமணி; தமிழ்மானங் காத்தவர்; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக் கொண்டவர்.
தமிழரின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருந்தகை; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்த செம்மல், நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; அதை மரமாக வளர்த்து மாண்புறச் செய்தவர் செந்தமிழ்ச் செல்வர் தேவநேயப் பாவாணர்.
அவரது வரலாறு தமிழினத்தின் வரலாறு. 79 ஆண்டுகாலம் இம் மண்ணில் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த அறிஞர். தம் வாழ்வு முழுவதையும் மொழி ஆய்வுக்காக ஈகம் செய்த இவ் வறிஞரின் இறுதிப்பொழுதும் ஆய்வுப் பொழுதாகவே அமைந்தது.
உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும், வேரும் தமிழ்; திரவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவிய செம்மல். உலகின் முதன் மாந்தன் தமிழன் என்பதும், தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே, மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழ நாகரிகமே என்பதும் பாவாணரது ஆய்வுப் புலத்தின் இரு கண்களாகும்.
இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழுக்கு ஏந்தலாக விளங்கிய பாவாணர் தோன்றாமல் இருந்திருந்தால், தமிழின் நலம் பெருமளவிற்கு அழிபுபட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தேவநேயப் பாவாணர் படைப்புகள், ஆய்வு நூல்கள், நாற்பதுக்கும் மேற்பட்டவையாகும். ஆய்வில் கட்டுரைகள் சிலநூறு. இவை அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாகத் திகழ்வது தமிழ், தமிழர் நலமே: இவரது படைப்புகளைப் படிப்பது என்பது தமிழ் நலத்தைப் பேணுவதாகவே அமையும்.
மரபிலக்கணத்தில் தோய்ந்த பாவாணரின் இலக்கணப் புலமையோடு, அவரது தெளிவான நடை படிப்போரைக் கவரும் தகையது. சொல்லும் கருத்தினைக் குழப்பத்திற்கு இடமளிக்காமல் விளக்கியிருப்பது அவரது ஆய்வுப்