எழுசுடர் ஞாயிறு |
"ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்
வாராது போல வந்த மாமணி" - பாவாணர்! |
"ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி"
- பாவாணர்! |
இஃது, "உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை." |
இதனை, "வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய்
கூறுவல்" என்றும், "செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று எஞ்சிறு செந்நாவே"
என்றும் வரூஉம் கழகச் சான்றோர் காட்சியுரைகளைக் காட்டாக்கிக் கூறுவேன். |
பாவாணர், தமிழ்மொழியின் தனி ஒளியைப்
பாருக்குப் பாரிக்கவென்றே பிறந்த, எழுசுடர் ஞாயிறு! |
மேலையாரிய மொழிகள், கீழையாரிய மொழிகள்,
திரவிட மொழிகள் இன்னவற்றையெல்லாம் விரல் நுனியிலே வைத்திருப்பார்போல,
சொற்பிறப்பியல் விரிக்க வந்த விரகர்! |
எத்துணை எதிர்ப்புகளுக்கும், ஈடழிக்கும் தடைகளுக்கும்,
இன்னாங்கு எழுந்த இடர்களுக்கும், தலை தாழ்த்தாது மலையென நிமிர்ந்து நின்று, ஆக்கப்பணிகள்
புரிந்த அரிமா! |
வாட்டும் வறுமையையும் தேட்டெனக் கொண்டு. திறமான
பணிபுரிந்த வாட்டருஞ்சீர் வண்டமிழ்த் தொண்டர்! |
வாரத்தால் மொழிவது அன்று இது! வாய்மையால் உண்மையாகவே
ஈடுசெய்ய இயலாத இழப்பு! |
வாரத்தால் மொழிவது அன்று இது! வாய்மையால்
மொழிவது! |
பாவாணர் பாவலர்; நற்றமிழ் நாவலர்; இலக்கியச்
செல்வர், இலக்கண வித்தகர்; உரைவேந்தர்; கட்டுரை வன்மையர்; நகைச்சுவை மிளிர
உரையாடும் நயத்தர்; நினைவின் ஏந்தல்; நுண்மாண் நுழைபுல எழிலர்; நுணங்கிய
கேள்வியர்; நுண்ணிய அறிவுக்கு, வணங்கிய வாயினர்; உண்மைத் தொண்டை உரையாலும்
பாட்டாலும் உள்ளார்ந்த உவகை ஊற்றெடுக்கப் பாராட்டும் ஒள்ளியர்; தக்காரை ஊக்கித்
தகவுணர்ந்து மதிக்கும் தண்ணியர்; தொல்காப்பியனார்க்குப் பின்னே அருந்தமிழ்
இலக்கணத் திணையிலாக் குரிசில் இவரே என்ன இலங்கிய பெற்றியர்! |
"தமிழர் தொன்மையை உலகிற்கு அறிவித்தவர்
கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத்
தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; "நானே மரமாக வளர்த்து
வருகிறேன்" எனத் தம் கூர்த்த மதியின் சீர்த்த நிலையை நுண்ணிதின் உணர்ந்து செம்மாந்து
கூறிய செந்நாவலர். "சொற்பிறப்பியற் பணிக்கென்றே தம்மை இறைவன் படைத்தனன்"
என உணங்கூர்த்துரைத்து, அப் பணிக்கே தம்மை முழுதுற ஒப்படைத்து உழைத்த உரவோர். |
- புலவர் இரா.இளங்குமரன் |