xx

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

எத்தனையோ மொழியறிந்த பாவா ணர்தாம்
     எழுதுவதும் பேசுவதும் தூய்த மழ்தான்!
முத்தனைய பழமொழிகள் உவமைப் பூக்கள்
     மொய்த்துமணங் கமழும்நடை அவர்ந டைதான்!
எத்திசையின் தமிழ்வழக்கும் அவரைப் போலே
     எவர் அறிந்தார்? கருவியிசை நான்கும் வல்லார்!
தித்திக்கும் பன்னூறாம் இசைப்பா டல்கள்
     தீட்டிஇசைத் தமிழ்க்குவளம் கூட்டி நின்றார்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழி யக்கம்
     இவர்உழைப்பால் செழித்ததுகாண்! இந்திப் போர்க்கே
எருவாகப் பலநூல்கள் இயற்றித் தந்தார்;
     இயக்கத்தில் தமைஈடு படுத்திக் கொண்டார்;
வரும்எதிர்ப்பை வரவேற்றார்; வறுமைத் துன்பம்
     வாட்டுகின்ற நிலையினிலும் மானம் காத்தார்!
கரும்பொன்பா வாணர்ஓர் இயக்க மாகக்
     கனிதமிழ்வாழ் காலமெலாம் வாழ்வார், வாழ்வார்!

முனைவர் இரா.இளவரசு