நம் பாவாணர் xix
கிளைபார்ப்பார் பூகாய்கள் கனிகள் பார்ப்பார்
      கீழிருக்கும் அடிமரத்தின் வேர்கள் தம்மின்
நிலைபார்ப்பார் அரிதாவார்; வைக்கம் வீரர்
      நிலம்புதைந்த வேர்பார்த்தார், வெந்நீர் ஊற்றும்
‘கலை‘வல்லார் சூழ்ச்சிதனை எதிர்த்து நின்றார்.
      கனிதமிழின் ஆணிவேர் பக்க வேர்கள்
அலைஅலையாய் உலகெங்கும் பரந்து செல்லும்
      அருமையினைப் பாவாணர் ஆய்ந்து சொன்னார்!
‘நாவுதல்‘ என் றால்‘கொழித்தல்‘; சுளகு கொண்டு
      நல்லரிசி யுடன்கலந்த கல்லை நீக்க
நாவிடுவார் மேல்கீழாய்த் தமிழப் பெண்டிர்;
      நாவிக்கொண் டேகடலில் செல்க லத்தை
‘நாவாய்‘‘நேவிசு‘ ‘நவ்‘வென்று திரிந்த வாற்றை
      நெஞ்சங்கொள் வகையுரைத்தார் தேவ நேயர்!
‘தாழ்வுணர்ச்சி வயப்பட்டே குனிந்து நிற்கும்
      தமிழ்மகனே! தென்குமரிக் கண்டம் இந்நாள்
ஆழ்கடலுள் சென்றாலும் உலகில் மாந்தன்
      அங்கேதான் பிறப்பெடுத்தான், அவன்உன் முன்னோன்;
வாழ்உலக முதன்மொழிஉன் தாய்த மிழ்தான்;
      வடமொழியின் மூலம், அதே திரவி டத்தாய்;
தாழ்வுணர்ச்சி விட்டொழிப்பாய், நிமிர்வாய்‘ என்றார்
      தமக்குவமை இல்லாத நம்பா வாணர்!
பழம்பெருமை மட்டும்அவர் பேச வில்லை;
      பண்பாட்டுச் சிதைவுகளை, தமிழ ரைக்கீழ்
விழச்செய்த சூழ்ச்சிகளைத் துருவிக் காட்டி
      வேற்றவர்யார்? நம்மவர்யார்? வருங்கா லத்தில்
எழுத்தமிழர் என்னென்ன செய்ய வேண்டும்?
      என்பவற்றைத் தெளிவாகக் காட்டும் நூல்கள்
தொத்தகுநம் பாவாணர் தொடர்ந்து தந்தார்.
      தூங்கியிருந் தோர்விழித்தார்; எழுச்சி கொண்டார்!