நம் பாவாணர்!

என்சாதிக் காரர்இவர் என்ப தாலோ
      என்சமயம் இவர்சமயம் எனநி னைத்தோ
என்கட்சிச் சார்புடையார் எனம கிழ்ந்தோ
      எவரும்பா வாணர்தமைப் போற்ற வில்லை.
தொன்மொழியாம் தமிழ்மொழியை மீட்ப தற்காய்த்
      தோன்றியவர் பாவாணர் எனத்தெ ளிந்தே
‘என்தலைவர் தமிழ்த்தலைவர் இவர்தாம்‘ என்றே
      ஏற்றிவைத்துத் தமிழ்நெஞ்சர் போற்று கின்றார்.
பொருள்திரட்ட வேண்டுமெனும் ஆவல் கொண்டோ
      புகழ்சேர்க்க வேண்டுமெனும் நோக்கத் தோடோ
வரும்பதவி விருதுகளை மனத்தில் வைத்தோ
      வரைந்தவரா பாவாணர்? இல்லை, இல்லை
இருள்நிறைந்த பெருங்குகையில் உழலு கின்ற
      எந்தமிழர் புதுவாழ்வு பெறுதல் வேண்டும்
ஒருநோக்கே பெருநோக்காய் எடுத்தார் தூவல்
      உருவான படைப்பெல்லாம் அறிவின் பாய்ச்சல்!
‘கூலி‘யெனும் சொல்லறிவோம்; இச்சொல் லேதான்
      கூறுபல மொழிகளிலும் ஏறி நிற்கும்.
கூலத்தைத் தவசத்தைத் தானி யத்தைக்
      கொள்ளும்உடல் உழைப்பினுக்குப் பகர மாக
ஞாலத்தார் பண்டுமுதல் கொடுப்பர்; இந்த
      நல்லதொரு வரலாற்றைக் ‘கூலி‘ காட்டுங்
கோலத்தைப் பாவாணர் விளக்கக் கேட்டே
      குதிபோடும் தமிழ்நெஞ்சம் புதுமை கண்டே!
கற்கையிலே நமைமருட்டும் அரிய சொற்கள்
      காண்அகர முதலியினால் எளிய வாகும்;
நெற்கதிரின் மணிகளைப்போல் சொற்பொ ருள்கள்
      நிகண்டுகளில் பதிந்திருக்கும்; இவற்றில் காணாச்
சொற்கள்தம் பொருள்மூலம் காட்டிப் பின்னர்த்
      தோன்றிவளர் மாற்றத்தை நிரல்ப டுத்தி
விற்கணையின் கூரறிவுப் பாவா ணர்தாம்
      விளக்குகையில் ஆ! ஆ! ஆ! வியக்கின் றோம்நாம்!