பாவாணரைப் போற்றும் பார் |
xvii |
வாயிலாகப் பதிவு
செய்து வைத்திருக்க வேண்டும்; அல்லது நாடாப்பதிவில் தம் வேர்ச்சொல்
லாராய்ச்சியை அப்படியே பதிவு செய்திருக்க வேண்டும். |
அப்படிச் செய்யாமையால், பாவாணரது அரிய
உழைப்பு, வாழ்நாள் முழுவதும் அவர் செய்த ஆராய்ச்சி, எந்தச் சொல்லுக்கு எந்த வேர்,
என்ன வளர்ச்சி, என்ன வரலாறு என்றுள்ள பல குறிப்புகளையும் நாம் உணரமுடியாமல்
போய்விட்டது. |
இன்று வெளிவரும் ‘செ.சொ.பி அகரமுதலித்
தொகுப்புகள்‘ பாவாணரின் அகரமுதலிகள் அல்ல. பாவாணவர் வழியில் வெளிவரும் தொகுப்புகளே.
இன்றுள்ள ஆய்வாளர்கள் கடுமையாக உழைத்தாலும் பாவாணரின் ஆராய்ச்சிச் செல்வம் தாங்கிய
தொகுப்புகளாக அவை இல்லை என்ற மனக்குறை எனக்குண்டு. |
இந்தப் படைப்புகள் இவ்வளவு நேர்த்தியாகவும்,
சிறப்பாகவும், செம்மையாகவும் வருவதற்குத் துணைநின்ற பெருந்தகை, பெரும்புலவர் அ.நக்கீரன்
அவர்களைப் போற்றுகிறேன். |
இலக்கிய இலக்கண அறிவும், தனித்தமிழ்ப்
பற்றும், பிழையின்றி நூல் பதிப்பிக்கும் ஆற்றலும், அகரமுதலித் தொகுப்பில்
முன்பின் மாட்டேறுகளைத் தவறவிடாத நுட்பமும், உழைப்புத் திறமுங் கொண்ட இப்
பெருந்தகையின் உழைப்பு நூல் முழுதும் மிளிர்வதை என்னால் உணர முடிகிறது. |
எனினும் அந்த வழியில் பணிகளை வேகமாக
முடிக்கும் - முடுக்கிவிடும்-வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்பதொன்றே மனநிறைவளிப்பதாகும். |
இன்னும் சில ஆண்டுகளில் ‘செ.சொ.பி.அகரமுதலித்
திட்டம்‘ நிறைவுபெறும். அதற்கு முன்னோ, பின்னோ வரும் ஆராய்ச்சியாளர்கள்
மேலும் ஆராய்ந்து வளம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். |
1940-ல் ‘ஒப்பியன்
மொழிநூலில்‘ பாவாணர் இப்படி எழுதினார்: "நூற்றுக்குத் தொண்ணூறு தற்குறிகளும் முன்னேற்றத்திற்கு
முட்டுக் கட்டையான மூடக்களஞ்சியங்களும் பகுத்தறிவில்லா உருவேற்றிகளும் குடிகொண்ட
இந் நாட்டில் மொழிநூலைப்பற்றித் தவறான கருத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை"
என்றார். |
61 ஆண்டுகளுக்குப்பின்
பாவாணர் தம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதா? ஏற்பட
வில்லையென்றால் என்ன கரணியம்? |
இப்போது நாம் செயத்தக்கது
என்ன? |
அன்பு நண்பர் இளவழகன்
இலக்கக் கணக்கான உருபா செலவிட்டுப் பாவாணரது அனைத்துப் படைப்புகளையும் கொண்டுவந்து
விட்டார். அதிலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான அழகான படைப்புகள். |
காலத்திற்கும் அழியாத கற்கண்டுக் கட்டிகள்!
அவர் வரலாறு படைத்துவிட்டார்!
நாம் என்ன செய்யப் போகிறோம்? |
|
ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும்
பாவாணர் நூல்கள் இடம் பெறட்டும். பாவாணரது கருத்துகள் உரம் பெறட்டும். |
வாழ்க பாவாணர் புகழ்! |
இளவழகன் உழைப்புக்கு உளம் நிறைந்த
பாராட்டு. |
முனைவர்.மு.தமிழ்க்குடிமகன் |