தன்மானத் திறவுகோலைக் கொண்டுதான் அறிவுப்பூட்டைத் திறக்க
முடியுமொன்று கண்ட மொழி வரலாற்றுப் பேராசிரியராகிய இவர், இத்தகைய போலித் தன்மைகளைக்
கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை, இவர் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது
தமிழ்; உயிர்ப்பது தமிழ்; கொண்டது தமிழ்; கொடுப்பது தமிழ்; விண்டது தமிழ்;
விளக்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும், தசையாகவும், குருதியாகவும் வாய்க்கப்பெற்ற
தமிழின் முழு உருவம் பாவாணர் என்னில் வியப்படையவும் வேண்டா; மிகையென்று
கருதிவிடவும் வேண்டா; இவரின் அளப்பரிய தமிழாற்றலைத் தமிழகம் பயன்படுத்திக்
கொள்ளுதல் வேண்டும். இவர் நூல்களை அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன.
தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக்காக்கும் அரிய ஒளிஞாயிறாகும். வீழ்ந்துபட்ட தமிழனுக்கு
விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்மொழியை
மீட்கவல்லது. மறைமலையடிகளால் தோற்றுவிக்கப் பெற்று, இவரால் பேணிக் காக்கப்பெற்ற
தனித்தமிழ் இயக்கம், செழிப்படைய அடையத்தான் தமிழ்மொழி துலக்கமுற்று
விளங்கும். அப்பொழுதுதான் தமிழ் அறிவியல் மொழியாகவும், வாழ்வியல்
மொழியாகவும் வளம்பெறும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய தென்மொழி
இலக்கணப் புலமையும், சமற்கிருதம், கிரேக்கம், இலத்தினம், உருது, இந்தி, ஆங்கிலம்
முதலிய வடமொழி இலக்கணப் புலமையும், ஒருங்கே கைவரப்பெற்ற மொழியியல் ஞாயிறான
இவர், தமிழகத்தை விளங்கிக் கொண்டுள்ள அளவுக்குத் தமிழகம் இவரை விளங்கிக்
கொள்ளுமானால், பயன்படுத்திக் கொள்ளுமானால் தமிழுக்கு என்றும் அழிவில்லை. தமிழினத்துக்கும்
என்றும் வீழ்ச்சியில்லை. |