தமிழகத்தின் தவக்குறை என்று நாம் எல்லோருமே சொல்லிக்
கொள்கின்ற அறிஞரைப் பேணாத குறை தமிழ்நாட்டு மண்ணிலோ, மரங்களிலோ விளைவதன்று,
அப்படிச் சொல்லியே தப்பித்துக் கொள்ளும் நம் ஒவ்வொருவருடைய மனத்திலும்
விளைவதுதான். அது வெறும் குறையாக மட்டும் நின்றுவிடவில்லை. தமிழக வரலாற்றிலேயே
என்றைக்கும் துடைத்தெறியப்படாத கறையாகவே படர்ந்திருக்கின்றது. இதனை நம்மில்
எல்லோரும் திருப்பித் திருப்பி ஒருவர் முகத்தில், ஒருவர் பூசிக் கொள்ளுகின்றோமேயன்றி,
இதனைப் போக்குகின்ற முயற்சியை நம்மில் எவரும், எக்காலத்திலும் இன்றுவரை செய்யவில்லை.
காரணம் நமக்கு இருக்கும் பகட்டான பேச்சுத்தான்; பார்ப்போரை மயங்க வைக்கும்
நடிப்புத்தான்; நமக்கு ஏற்பட்ட அரசியல் திளைப்புத்தான்; அறிவை அறிந்துகொள்ள
மறுக்கின்ற அறியாமைச் செருக்குத்தான்; மொத்தத்தில் நம் உடலில் ஊறிக்கிடக்கும்
இருண்ட வாழ்க்கையின் ஈடுபாடுதான். இந்நிலைகள் இந்தத் தலைமுறையிலிருந்து தமிழக
மண்ணில் அறிஞர்களே தோன்றமாட்டார்கள் என்பது திருக்குறள் போன்ற உண்மை; தொல்காப்பியம்
போன்ற உறுதி; பாவேந்தர் பாடல்கள் போன்ற தெளிவு! |