ஒளிப்புலன் ஞாயிறு

பளபளப்பான கருத்த முகம்; ஒளி நிரம்பி வழியும் கூரிய விழிகள்; அகன்று ஏறிய நெற்றி; அடர்த்துச் சிலிர்க்கும் அரிமா மீசை; ஏக்கழுத்து: பீடு நடை; பெருமிதமான உடை; அறிவு தெறிக்கும் கணீர் என்ற பேச்சு; குழந்தை உள்ளம் இவற்றின் மொத்த உருவம் பாவாணர்.
தமிழ்மொழி ஆய்விலேயே ஐம்பது ஆண்டுகள் மூழ்கித் திளைத்த இப்படிப்பட்ட பேரறிஞர் ஒருவரைத் தமிழகம் இந்நாள்வரை கண்டதே இல்லை. இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துகளை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிடவில்லை. தமிழ்த்துறைக்கு அவர் தொண்டு புதியது. தமிழர்க்கு அவர் கருத்துகள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன; அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின் தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் பாவாணர் என்றே பெயரிடலாம்.
அவர் கருத்துகள், முரிக்கப்பட்ட தமிழனின் முதுகெலும்பைத் தூக்கி நிறுத்தும் வல்லமை வாய்ந்தன; தூங்கிக் கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பும் வீறு நிரம்பியன; மங்கிக் கிடக்கும் தமிழ்மொழியின் செம்மாப்பினை உலகமெலாம் பறைசாற்றும் ஆற்றல் நிறைந்தன; மொழியாராய்ச்சி என்னவென்றே அறியாமற் கிடந்த தமிழக்கு மொழியுணர்வூட்டி, அதன்வழிப் பண்டைய வரலாறுணர்த்தி எழுச்சி பெறச் செய்வன. அவர் பேச்சும் எழுத்தும் தமிழரின் ஒவ்வொரு செவியிலும் அறிவிலும் பட்டு எதிரொலித்தல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழன் தன்னுணர்வு பெறுவான்; தன்மானங் கொள்வான்; தன்னறிவுணர்வான்; மொழிப்புலங் காணாது வழிப்புலந் தப்பிய தமிழனுக்கு அவர் ஊட்டும் விழிப்புணர்வும், அதனின்றெழும் ஒவ்வொர் ஆய்வு முடிவும் தமிழர்க்கு என்றைக்கும், ஒளிகாட்டி நிற்கும் என்பதில் ஐயமே இல்லை.
ஆனால், வெற்றாரவாரச் சொற்புகழ்ச்சியும், விளம்பரப் போலிமையும் இக்காலத்துக் கற்றாரிடத்தும் நிரம்பி வழியும் கரணியத்தால், மெய்மைக்கும் பொய்மைக்கும் வேறுபாடு காண்பது மிக மிக அரிதாக உள்ளது. அன்றாடம் நடைபெற்று வரும் அரசியல் சூழ்ச்சிகளாலும், அறியாமையாலும், வறுமையாலும் பிற கல்வித் துறைகளின் மேம்பாடுகள் அனைத்தையும் எடுத்துக்கூறவும் ஆள்இன்றிச் சீந்துவாரற்றுக் கிடக்கும் தற்காலத் தமிழகத்தில் ஏன் பிறந்தோம் என்று அறிஞர் அலமந்து கிடக்கின்றனர். அறிவியலும், வாழ்வியலும் மேனாட்டாரை எந்த அளவுக்கு ஆட்கொண்டனவோ, அந்த அளவிற்குத்