xxxviii

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

"சொன்மூலம் வேர் (root), அடி (stem), முதனிலை (theme) என மூவகைப்படும். வேரும் முதல்வேர் (ஆணிவேர்), வழிவேர் (பக்கவேர்), சார்புவேர் (சல்லிவேர்) என முத்திறப்படும். முதல் வேருக்கு மூலம் முளையாகும். முளைக்கு மூலம் வித்தே. அடி என்பது சுவையுங் கொப்புங் கிளையும் போத்துங் குச்சுமாகப் பிரியும். இவையெல்லாம் தமிழ் போன்ற இயன்மொழியிலேயே தெளிவாகக் காணப்பெறும்" ( வட. வர. பகுதி 2, ப.117).
சொல்லாய்வறிஞர் பலர் பாவாணர் வழிநின்ற சொல்லாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லாய்வறிஞர்க்குப் பொறுமை, இலக்கணப் புலமை, அயராவுழைப்பு, மொழியார்வம் நிறைந்திருக்க வேண்டும்.
முனைவர் இரா.மதிவாணன், ப.அருளி, முனைவர் கு.அரசேந்திரன், புலவர் இரா.இளங்குமரன், முனைவர் இரா.கு.ஆல்துரை, சாத்தூர்ச் சேகரன் ஆகியோர் தம்மைச் சொல்லாய்வில் ஈடுபடுத்தி உழைத்துவருகின்றனர். இப் பணி மேலும் பெருக வேண்டும்.
பாவாணர் கோட்பாடுகள்

1. மாந்தன் தோன்றிய இடம், அழிந்துபோன குமரிக்கண்டமே.
2. மாந்தன் பேசிய முதன்மொழி தமிழே; அதுவே ஞால முதன்மொழி.
3 . தமிழ் திரவிடத்துக்குத் தாயும், ஆரியத்துக்கு மூலமும் ஆகும்.
4. தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள்.
5. இற்றைத் தமிழிலக்கியத்திற்கு அணியாய் இருப்பதும், தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறதற்கு ஆவணம்போல் உதவுவதுப் தொல்காப்பியம் ஒன்றே.

தன்னம்பிக்கை

1. அகரமுதலிப் பணிக்காகவே இறைவன் என்னைப் படைத்தான்.
2. என் நூல்களுள் தலைசிறந்ததும், வேறெவராலும் செய்ய முடியாததும், தமிழின் தலைமையை நிலைநாட்டுவதும் அகரமுதலிப் பணி ஒன்றே. என் ஆராய்ச்சியின் முழு விளைவும் அஃதே.
3. இறுதியில் என் நூல்களால்தாம் தமிழுக்கும் தமிழர்க்கும் நலம் பிறக்கும். அதனைப் பின்னர்க் காண்பீர்கள்.
4. மறைமலையடிகட்குப் பின் தமிழ்த் தூய்மை பேணும் பேராசிரியன் யான் ஒருவனே.
5. என் புலமையைப் பொறுத்த வரையில் மறைமலையடிகள் ஒருவரே மதிப்புரையோ முன்னுரையோ வழங்கத் தக்கவர்.
6. என் திருக்குறள் தமிழ் மரபுரை ஒன்றே என் தகுதியைப் பெயர் காட்டப் போதும்.