மாடல மறையோன் செல்வாக்குச் சிலம்பு முழுதும் திகழ்கின்றது.
கோவலன் செய்த நற்செயல்கள் எல்லாம் பார்ப்பனர்க்கே. அதனால் மாடலன்
அவனைக் ‘கருணை மறவ‘, ‘செல்லாச் செல்வ‘, ‘இல்லோர் செம்மல்‘ என ஏத்திப்
புகழ்ந்தான்.
கோவலனை அறியாது கொன்ற நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றவன்;
பார்ப்பனர்க்குக் களைகணாய்த் திகழ்ந்த கோவலனைக் கொன்றவன்; திருட்டுப்
பொருள் சேர்த்தான் என்று பிறர் தெரிவிக்க வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச்
சிறையிட்டான். இதனால் ஐயை கோயில் பூசாரி கோயிலைப் பூட்டினான்; பார்ப்பனார்
போராடினர். இறுதியில் பாண்டியன் பணிந்து வார்த்திகனைச் சிறைவீடு செய்தான்;
அவன் காலில் விழுந்து வணங்கினான் பாண்டியன்; தங்கால் என்னும் ஊரொடு பரிசில்
பல வழங்கினான். இருந்தும் பார்ப்பனர் சினம் தணியவில்லை.
கோவலன் கொலையுண்டபின் கண்ணகி மதுரையை எரித்தாள் என்று சிலம்பு
குறிப்பிடும். ஆரியர்மீது படையெடுத்து அவரை வென்றமையாலும், வார்த்திகனைச் சிறையிட்டதாலும்,
தங்களுக்கு நல்லன செய்த கோவலனைக் கொன்றதாலும் கண்ணகி மதுரைக்குத் தீயிட்டாள்
என்னும் காரணத்தைக் கொண்டு மதுரை நகரை எரித்து அழித்தனர் பார்ப்பனர்.
பல்லவர் காலத்தில் தமிழகத்தில் பத்தி இயக்கம் தலையெடுத்தது. இதனால்
தமிழும் வளர்ந்தது; சமயமும் வளர்ந்தது. பல சாதிகளைச் சார்ந்தவர்களும் நாயன்மார்,
ஆழ்வார் கூட்டத்தில் உண்டு.
நந்தனார் என்னும் தாழ்த்தப்பட்டவர் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
தில்லைக் கோயிலுள் நுழைந்து வழிபடத் தில்லைவாழ் அந்தணர் தடுத்தனர்; தீயிட்டுக்
கொளுத்தியும் கொன்றனர்.
இதனுடன் அமையாது சுந்தரருக்குப் பின் மூவர் தேவாரம் அடங்கிய ஏடுகளைத் திரட்டித்
தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் அறையில் வைத்துப் பூட்டினர்; தேவாரம் தமிழ்மக்களிடையே
பரவாது தடுத்தனர்.
பிற்காலச் சோழப் பெருவேந்தன் முதலாம் இராசராசன்,
நம்பியாண்டார் நம்பி மூலம் இதனைக் கேள்வியுற்று, தில்லைவாழ் அந்தணரை
அணுகிக் கேட்டான். அவர்கள் தர மறுத்தனர். தேவாரம் பாடிய மூவரும் ஒருங்கே
வந்து கேட்டால்தான் தருவோம் என விடையிறுத்தனர்.
பின்னர் இராசராசன் தேவாரம் பாடிய மூவர் திருமேனியுடன் வந்து கேட்டான். வேறு
வழியில்லாது அந்தணர்களும் தேவார ஏடுகள் பூட்டியிருந்த அறையைத் திறந்து காட்டினர்.
அந்தோ! கறையான் அரித்துப் பல்லாயிரம் பாடல்கள் அழிந்து ஒழிந்தன. எஞ்சியவற்றை
நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு தொகுத்தான் மன்னன். இசைஞானியார் என்னும்
ஓர் ஆதி திராவிடப் பெண்ணே தேவாரத்துக்குப் பண் வகுத்தார்.