xlvii
அவர்களுக்கும் நன்றி. நூல்கள் முன்பதிவுத் திட்ட விளம்பரத்தைக் கண்ணுற்ற தனித்தமிழ் ஆர்வலர்கள், வெளிநாடுகளில் வாழும் பாவாணர் அன்பர்கள், பேராசிரியர்கள் பலரும் என்னைப் பாராட்டி முன்பணம் அனுப்பிவைத்து உதவினர். இவர்கள் காலத்தால் செய்த உதவிதான் எனது பணிக்கு உந்துதலாக இருந்தது. இவர்களுக்கு நான் என்றென்றும் கடப்பாடுடையேன்.
நூல் வெளியீட்டின் நோக்கம்
என்பால் அன்பு கொண்ட நண்பர்கள் பலரும் இப்பெரும் பணியைத் தொடங்கி மேலும் பொருள் நெருக்கடிக்கு ஆளாக வேண்டா என்றனர். இளமைதொட்டுத் தாய்மொழி யுணர்வும், இன உணர்வும், நாட்டுணர்வும் என் குருதியில் இரண்டறக் கலுந்து இழையோடுவதால், தொல்லைகளைத் தாங்கிக் கொண்டு உயரங்களைத் தொட வேண்டும் எனும் மன உறுதியோடு, தமிழ் உணர்வாளர்களை நம்பித் தமிழரின் அடையாளச் சின்னங்களான மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் நூல்கள் அனைத்தையும் மறுபதிப்பாக வெளியிடும் இவ் வரும்பணியைத் தொடங்கி முடித்துள்ளேன். இயன்றவரை நூல்களைச் செப்பமாக ஆக்கியுள்ளேன். மேலும் குறைகளிருப்பின் அடுத்த பதிப்பில் அவற்றை நீக்கி நிறைவு செய்வேன். தமிழர்தம் இல்லந்தோறும் இருக்கவேண்டிய ஒப்பற்ற வரலாற்றுக் கருவூலமான மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் நூல்களைத் தமிழர்களின் கைகளில் தவழவிடுகிறேன். கைகொடுத்து உதவுங்கள்.

வெல்க தமிழ்!

கோ.இளவழகன்
பதிப்பாளர்