முகவுரை |
வெள்ளைக்காரர் சொல்வதெல்லாம் விழுமிய அறிவியல்
என்னும் குருட்டுத்தனமான கருத்து, இந்தியாவில் இன்னும் கற்றாரிடத்தும் இருந்து
வருகின்றது. வெள்ளை என்னும் சொல், வெண்ணிறக் கருத்தடிப்படையில், தூய்மையை மட்டுமன்றி
வெறுமையையுங் குறிக்கும். |
நீராவியையும் மின்னாற்றலையும் அடிப்படையாகக்
கொண்டமைந்த இக்காலப் பொறிவினை சூழ்ச்சியவினை அறிவியல்களெல்லாம், மேலையர்
கண்டனவே. ஆயின், மொழிநூலோ உலகின் முதன்முதல் இலக்கணம் இயற்றப்பெற்ற தமிழில்
தோன்றியமையால், தமிழர் கண்டதாகும். அது இக்காலத்திற்போல் விரிவடையாததேனும்,
மொழிகள் பல்காத முந்திய காலத்தில் தோன்றியமையால், அக்கால முறைமைப்படி முழுநிறைவானதே. |
எல்லாக் கலைகட்கும் அறிவியல்கட்கும் வரலாறு
அடிமணையும் முகுகந்தண்டுமாதலால், வரலாற்றை நீக்கி வரையப்பட்ட எந்நூலும், எவர்
இயற்றியதேனும் அறிவியன்முறைப் பட்டதாகாது. |
வணிகத்துறையிற்போன்றே மொழித்துறையிலும், ஒரு
மொழி விளம்பரத்தினால் உயர்வதும் இன்னொரு மொழி அஃதின்மையால் தாழ்வதும் நேர்கின்றன.
தம் பொருளை விளம்பரஞ் செய்வார் பிறர்பொருள் விளம்பரத்தைப் பல தீயவழிகளால்
தடுப்பதும், எல்லாத் துறையிலும் வழக்கமாயிருந்து வருகின்றது. |
விளம்பரத்தாலும் வேறுவகையாலும் பிறரை ஏமாற்றுவதையே
ஒருவர் மேற்கொள்ளினும், எல்லாரையும் எக்காலத்தும் ஏமாற்றமுடியாது. ஒரசாராரை ஒரு
வரைப்பட்ட காலத்திற்குத்தான் ஏமாற்றமுடியும்; ஒரு சாராரை எக்காலத்தும் ஏமாற்றலாம்;
ஒரு சாராரையோ ஒருகாலத்தும் ஏமாற்ற முடியாது. |
ஒரு பொருளின் உண்மையை ஒப்புக்கொள்ளுதற்கு நடுநிலைமையும்
வேண்டும். அல்லாக்கால், ஏதேனுமொரு தொடர்புடையவர் பொருள் பிறர் பொருளினுந் தாழ்ந்ததாயிருப்பினும்,
உளச்சான்றிற்கு மாறாக அதை உயர்ந்த தென்றே கொள்ள நேரும். |
ஆயினும், பொதுவாக, இறுதியில் "மெய்வெல்லும்;
பொய் தோற்கும்" என்றே நம்பப்படுதலால், ஆரிய விளம்பரத்தின் விளைவாக மறைந்து
கிடக்கும் தமிழைப்பற்றிய உண்மைகளை அறிதற்குத் தடையாகவுள்ள வண்ணனை மொழிநூலின்
வழுவியலை, மொழிநூல் கல்லாரும் கண்டறிந்து கொள்ளுமாறு, இச் சிறுநூலை எழுதத் துணிந்தேன். |