முகப்புதொடக்கம்

xv


கையகராதிகள்:

'இளைஞர் தமிழ்க் கையகராதி' என்பது மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்களால் தொகுத்துப் பள்ளி மாணவர்க்கெனவே படைக்கப்பெற்றது. ஏறத்தாழ 8500 சொற்களைக் கொண்டது, திரு. பிள்ளையவர்கள் குழந்தைகளுக்கான நூலாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள். பல்வேறு பதிப்பக நூல்களும் இவர் கண்பார்த்துச் செம்மைபெற்றன. பண்டைஇலக்கிய இலக்கணங்களைச் சீரிய முறையில் கூர்ந்தாய்ந்து பதிப்பிப்பதில் ஒப்புயர்வின்றி விளங்கியவர். மாணவர்க்கான பாடநூல்களில் பல நாள் ஈடுபட்ட தம் பயிற்சியின் விளைவாக உயர்நிலைப்பள்ளி மாணவர்க்குத் துணைநிற்கும் வகையில் இந்தக் கையகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இது சென்ற நூற்றாண்டில் தோன்றிய 'அகராதிச் சுருக்கம்' நூலை அடியொற்றியது. இது 1928-ல் மலர்ந்தது ; பின்னும் சில பதிப்புகளைப் பெற்றது. இவையிரண்டுமே சட்டைப்பையில் வைத்துக்கொள்ளத்தக்க சிறிய ஆங்கில அகராதி போன்றனவாகும்.

நவீன தமிழ் அகராதி :

தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி சொற்பொருள்களோடு பல்வேறு வகையான செய்திகளின் விளக்கங்களையும் கொண்டு விளங்கும் புத்தகராதி என்பது தெரியவரும் .தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியின் அமைப்பையும் போக்கையும் ஒட்டி 1935 - ல் வெளியானது இந்த நவீன தமிழ் அகராதி . இதனை ஆக்கியவர் புரசைப்பாக்கம் தமிழ்ப் பண்டிதர் சீ கிரிஷ்ணசாமிப் பிள்ளையாவார் . இவர் தாம் தொகுத்த அகராதியைக் குறித்துப் பின்வருமாறு சுட்டியுள்ளார் .

'' நமது தமிழ்மொழியில் அகராதிகளும் நிகண்டுகளும் சொற்பொருளாராயச்சி செய்யாது குறைபாடுடையனவா யிருக்கின்றன . ஆகவே , தற்காலத்தில் பல நாடுகளிலுமுள்ள பல நூறாயிரம் மக்கள் தாங்கள் கற்கப் புகும் தமிழ்நூல்களுள் வரும் கடினமொழிகளின் பொருள்களை எளிதில் உணரும்வண்ணம் வீணில் பெருக்கியும் அழகுகுன்றச் சுருக்கியுமிராமல் இன்றியமையாத சொற்களனைத்தையும் திரட்டித் தக்க இடங்களில் மொழிகளுக்கேற்ற பொருள்களை இலக்கியங்களினின்றும் உதாரணமுகத்தால் விளக்கிக் காட்டியும் , எழுத்துப் பிழையில்லாமலும், வழக்காற்றிலுள்ள மொழிகளுக்கு உடுக்குறியும்* ஒரு மொழியின் பொருள்கள் உலக வழக்கிலிருப்பின் அவற்றைப் பிராக்கெட்டுக்கு [ ] முன்னதாகவும் அமைத்து இதற்கு 'நவீன தமிழ் அகராதி ' என்னும் பெயரைத் தந்து பதிப்பித்தனன்.''

இலக்கியச் சொற்கள் , வழக்காற்றுச் சொற்கள் , பொருள்கள் ஆகியவை எந்தவகையில் இதில் தரபட்டுள்ளன என்பது தெளிவாகிறது . மாணவர் அகராதியை வெளியிட்ட ஸி . குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் நிறுவனத்தாரே இதனையும் வெளியிட்டுள்ளனர் . பெரும்பான்மையும் மாணவர் அகராதியைத் திருத்தியும் புதுக்கியும் வெளியிட்ட ஒரு பதிப்புப் போன்றதே இந்த அகராதி.

தமிழமிழ்த அகராதி-தமிழறிஞர் அகராதி:

இவற்றை வெளியிட்டோரும் ஸி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் நிறுவனத்தாரேயாவர். தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியில் அனுபந்தமாகச் சேர்க்கப்பெற்ற பல பொருள்களும் இவற்றில் வகைப்படுத்தப்பெற்று வளப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்குப் பிறமொழிச் சொற்களையும், எழுத்துப் பேதத்தால் பொருள் மாறுபடும் சொற்கள் முதலியவற்றையும் அறிய இவை பயன்படும்.*


* இவற்றின் பொருளடக்க விரிவை ' மொழியியல் அகராதிகள் ' என்னும் தலைப்பின்கீழ்ப் பின்னர்க் காண்க - பக்கம் xxii -xxiii.