முகப்புதொடக்கம்

xvi


கழகத் தமிழ்க் கையகராதி:

இளைஞர் தமிழ்க் கையகராதிக்கு அடுத்த நிலை, இதில் உள்ள சொற்களைவிடவும் ஒன்றரை மடங்குச் சொற்களைக் கொண்டது இந்த அகராதி ; இதில் 12500 சொற்கள் இடம்பெறுள்ளன. இதனைத் தொகுத்து அளித்தோர் சேலைசகதேவ முதலியாரும் காழி சிவ. கண்ணுசாமிப் பிள்ளையவர்களுமாவர் . இதனைத் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் 1940-ல் வெளியிட்டுளளனர். எனவேதான் இதற்குக் ' கழகத் தமிழ்க் கையகராதி ' எனப் பெயரிடலாயினர் . இதுவும் சட்டைப்பையில் அடங்கும்படியான அளவினதே.

கோனார் தமிழ்க் கையகராதி:

வித்துவான் ஐயன்பெருமான் கோனார் திருச்சிராப்பள்ளியில் பள்ளித் தமிழாசிரியராக விளங்கியவர் ; பள்ளியிறுதி வகுப்புப் பாடநூல்கள், கல்லூரித் தமிழ்ப் பாடநூல்கள் ஆகியவற்றிற்குப் பல ஆண்டுகளாய் உரைநூல் வெளியிட்டுவந்தவர். எனவே, மாணவர்களுக்கான பாடநூல்களில் பயின்றுவரும் சொற்பரப்பினை நன்கு தெரியும் வாய்ப்பினைப் பெற்றிருத்தார். இவர் எழுதிய உரைநூல்களை வெளியிட்டுவந்த பழனியப்பா சகோதரர் நிறுவனத்தார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்றவகையில் ஓர் அகராதி ஆக்கக் கோனார் அவர்களுக்கு ஊக்கம் தந்தனர். இவருடைய அகராதித் தொகுப்பை இவர் பெயரையிட்டுக் 'கோனார் தமிழ்க் கையகராதி' என்னும் பெயரில் 1955-ல் வெளியிட்டனர். 'இஃது இளைஞர் கையகராதியினும் பார்க்க இருமடங்குச் சொற்கள், அதாவது 16500 சொற்கள் கொண்ட சிற்றகராதியாக உள்ளது.

தமிழ் இலக்கிய அகராதி:

கோனார் தமிழ்க் கையகராதியை அடுத்து 1957-ல் வெளிவந்தது 'தமிழ் இலக்கிய அகராதி' . இதனை எழுதித் தொகுத்தவர் வித்துவான் பாலூர் து. கண்ணப்ப முதலியாராவார். இவர் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் பயிற்றுவித்தவர். இந்த அகராதியைச் சொல் அகராதி, தொகை அகராதி, பிரபந்த அகராதி, நூல் அகராதி , புலவர் அகராதி என ஐந்து கூறாக அமைத்துத் தந்துள்ளார். சதுரகராதி என்றாற்போல் இதனைப் 'பஞ்சக அகராதி' என்று சுட்டலாம். இந்த அகராதியின் அமைப்பும் சிறப்புத் தனமையும் குறித்துத் தொகுப்பாசிரியர் முன்னுரையில் தரும் விளக்கவுரை வருமாறு:

"தமிழ் இலக்கிய அகராதி என்னும் இந் நூல் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் , இடைநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கட்குப் பாடநூலாக வரும் இலக்கியங்களிலும் உரைநடைகளிலும் காணப்படும் சொற்களுக்குரிய பொருள்களை நன்கு உணர்தற்கான வழிகளில் தொகுத்து எழுதப்பெற்றுள்ளது. இலக்கிய மொழிகளையன்றி உலகவழக்கு மொழிகளுக்குரிய பொருள்களையும் இது தன்னகத்துக் கொண்டுள்ளது. அடிக்கடி நூல்களின் வாயிலாகவும் பேச்சுவழக்கின் வாயிலாகவும் காணப்படுகின்ற வடசொற்களுக்கும் சாஸ்திர சம்பந்தமான சொற்களுக்கும் பொருள் அறிய இது துணைசெய்ய வல்லது. இவ் வகராதி கையகத்திருப்பின் சொற்களின் பொருளை முட்டின்றிப் பிறர் உதவியின்றி அறிந்துகொள்ளலாம்.

இந் நூல் சொற்களுக்குரிய பொருளை அறிதற்குத் துணை செய்வதோடு நில்லாமல் தொகைச்சொற்கள், தொடர்மொழிகளின் விளக்கங்கள், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நூல்கள் பலவற்றினைப்பற்றியும் புலவர்களில் பலரைப் பற்றியும் குறிப்புக்கள் கொண்டு திகழ்கிறது. ஆகவே, தமிழ்நூல்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் ஒருங்கே அறிதற்கு இந் நூல் பெருந்துனை செய்வது."

இதுவும் கையகராதி நிலையில் உள்ளதே. இவர் இந்த அகராதியை ஐந்து பகுதிகளாகப் பகுத்து அமைத்தது ஒரு புதுமை.