முகப்பு | தொடக்கம் |
xvii |
லிப்கோ-தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி: லிப்கோ நூல் வெளியீட்டு நிறுவனம் பள்ளிகளுக்கான பாடநூல் , உரைநூல் , பொது மக்களுக்கான பலவகை நூல்களை வெளியிட்டு வருவது . இதன் சார்பில் அமைந்த இந்த அகராதியில் தமிழ்-தமிழ்ப் பொருளோடு ஆங்கிலப் பொருளும் சேர்த்துத் தரப்பட்டிருக்கிறது . இது பள்ளி மாணவரைக் குறியாகக்கொண்டு வெளியிடப்பெற்ற ஒரு சிற்றகராதி. மணிமேகலைத் தமிழகராதி: 'கல்கண்டு' என்னும் வார இதழை வெளியிட்டுவந்த தமிழ்வாணனார் முயற்சியில் முகிழ்த்தது இந்த அகராதி. அவர் தாம் படைத்த பல நூல்களையும் 'மணிமேகலைப் பிரசுரம்' என்னும் பெயரில் அமைந்துள்ள தம் பதிப்பகத்தின் வழியே வெளியிட்டுவந்தார். இப் பதிப்பகத்தில் அதன் பெயரைத் தாங்கி 1979-ல் வெளிவந்தது இந்த அகராதி. இது தோற்றத்தில் ஓரளவு கோனார் தமிழ்க் கையகராதிபோலக் காணப்படுகிறது. என்றாலும் இதில் அதைவிடவும் அதிகமான சொற்பொருள்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நடுத்தர அகராதிகள்: தொடக்கநிலைச் சிற்றகராதி, கையகராதி, சிற்றகராதி போலாது நடுத்தர அளவிலான அகராதிகள் சிலவும் உருவாகி வெளிவந்து உலவின. செந்தமிழ் அகராதி, கம்பர் தமிழ் அகராதி என்னும் இரண்டும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.' செந்தமிழ் அகராதி ' ந.சி. கந்தையாப் பிள்ளையால் தொகுக்கப்பெற்று ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தாரால் 1950-ல் வெளியிடப் பெற்றது. இதனை அடுத்து 1951-ல் வந்த கம்பர் தமிழ் அகராதியைத்தொகுத்தவர் வே. இராமச்சந்திர சர்மா என்பவராவார் . இவை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்க்கு ஏற்றவகையில் திட்டமிட்டுத் தொகுக்கப்பெற்றன. கழகத் தமிழ் அகராதி: மேலே சுட்டிய இரண்டு அகராதிகளினும் இருமடங்கு பெருக்கமுற்றுத் தோன்றிய அகராதி கழகத் தமிழ் அகராதி . இது திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் 1964-ல் வெளியிடப்பெற்றது . இதனைக் கழகப் புலவர் குழுவினர் தொகுத்துச் சீர்தூக்கிச் செம்மைப்படுத்தி அமைத்துள்ளனர் . இதனை நடுத்தர அகராதிகளினும் விரிவுபெற்ற சிறப்பகராதி என்னலாம். பள்ளி , கல்லூரிகளில் பயில்வார்க்கும் புலவர்களுக்கும் பயன்படும் வகையில் இது காணப்படுகிறது . சுருக்கத் தமிழ் அகராதி: சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி உலகமறிந்த ஒரு பெரும் பேரகராதி. 1913-ல் தொடங்கித் தக்க அறிஞர் பெருமக்கள் பலரால் வளர்க்கப்பெற்று, 1932-ல் முற்றுவிக்கப்பெற்றது . ஆறு பெருந்தொகுதிகளையும் இணைப்புத் தொகுதி ஒன்றையும் கொண்டுள்ளது . அண்மையில் இது நிழற்பட அச்சில் மறுபதிப்புப் பெற்றுள்ளது. இந்தப் பேரகராதியின் சுருக்கமே ' சுருக்கத் தமிழ் அகராதி ' (Concise Tamil Lexicon) என்னும் பெயரில் வெளியிடப்பெற்றது. தமிழ்ப் பேரகராதியை அச்சிட்ட சென்னை லா-ஜர்னல் பிரஸ் அதிபரே இச் சுருக்க அகராதியையும் பதிப்பிக்க முன்வந்தார் . சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையினரின் மேற்பார்வையில் சுருக்க அகராதி வேலை நடைபெறலாயிற்று.
அப்பொழுது தமிழ் ஆராயச்சித்துறைத் தலைவராயிருந்த பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்கள் சுருக்கத் தமிழ் அகராதிக்கு உரிய திட்டமொன்றை வகுத்து அளித்தார் .
சுருக்கப் பதிப்பில் பேரகராதியில் உள்ள சொற்களுள் பின்வரும் வகையிலான சொற்கள் விடுபட வேண்டியவை எனத் திட்டம் செய்தார்: |
![]() |
![]() |
![]() |