முகப்புதொடக்கம்

xviii


5. இலக்கியத்தில் பயின்று வழங்காத வடசொற்கள்.
6. சிறப்புப் பெயர்கள்
(Proper names).
7. தொடர்மொழிகள்
(Compound words).
8. சிதைவுச் சொற்களும் குறிப்புமொழிகளும்.
9. இலக்கியத்தில் பயின்றுவராத நிகண்டுச் சொற்கள்.

இத் திட்டத்தின்படி பேரகராதியின் சொற்களைப் பார்வையிட்டபோது சமய பரிபாஷைச் சொற்களையும் நவீனமாக ஆக்கப்பெற்ற சொற்களையும் விட்டுவிடலாம் என்று பின்னர் முடிவுசெய்தனர்.

இம் முடிவுகளின்படி சுருக்க அகராதியின் பதிப்பாசிரியராய்த் திரு. மொ. ஸ்ரீ செல்வம் ஐயர்,எம்.ஏ., எல்.டி. பேரகராதியிலிருந்து சொற்களைத் தெரிந்தெடுத்தார் . தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களும் தமிழாராய்ச்சித் துறையின் தலைமைத் தமிழ் விரிவுரையாளர் திரு.மோ.அ துரை அரங்கசாமி அவர்களும் பதிப்பாசிரியருடனிருந்து ஆராயந்து திட்டமிட்டபடி விலக்க வேண்டியவற்றை விலக்கிச் சுருக்கத் தமிழகராதியை உருவாக்கினர் . 1955-ல் வெளிவந்த இந்தச் சுருக்க அகராதி மாணவர்க்கும் பொது மக்களுக்கும் பயனுடையதாகும் என்று கருதப்படுகிறது.

ஆனால் , இந்த அகராதி ஏழு தொகுதிகளில் அமைந்த பேரகராதிக்கு ஏற்புடைய சுருக்க அகராதியாக அமையவில்லை ; 154 பக்கம் கொண்டதொரு சிற்றகராதியாகப்போயிற்று. இதனால்தான் இது மிகுதியாக அறிஞரிடையே வழங்கப்பெறாமல் முதற்பதிப்புடனேயே நின்றுபோயிற்று.

விக்டோரியா தமிழ் அகராதி:

இது ஏனைய தமிழ் அகராதிகள்போலாது தனி நோக்குடன் சொற்களைப் பாகுபடுத்தித் தொகுத்துத் தருவது. பத்திரிகைகளும் பருவ இதழ்களும் போட்டிப் பரிசுக்கான நுண்பொருள்களைத் தாங்கிவரும் நிலை தோன்றியது. அத்தகைய போட்டிகளுக்கு விடை கண்டறிவதற்கு ஏற்புடைய சொற்களைக் கொண்ட அகராதி அவசியமாயிற்று. இந்த அகராதியை ஆக்கியவர் எஸ் . குப்புஸ்வாமி என்பவராவார்.

இவ் வகராதியை ஆக்க ஆசிரியருக்குத் தூண்டுகோலாயிருந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியான ஆங்கிலப் பரிசுச் சொற்போட்டியே யாகும். மேலும், அந்நாளில் ஆனந்தவிகடனில் வெளிவந்த போட்டிப் பந்தயக் குறிப்புகளும் சித்திரங்களும் இந்த அகராதிக்கு உதவியுள்ளன . போட்டிப் பந்தயங்களுக்குப் பயன்படும் வகையில் அகராதி ஒன்று தமிழ்மொழிக்கு இன்றியமையாதது என இவர் கண்டார்.

இந்த அகராதியில் ஓரெழுத்து முதல் ஆறெழுத்து வரையில் உள்ள சொற்களைத் தொகுத்து அகராதியாக்கித் தந்துள்ளார் . அபிதான கோசம், அபதான சிந்தாமணி, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, சொல்லகராதி, பொருளகராதி முதலிய நூல்களின் துணை கொண்டு ஒத்திட்டு இதனைத் தொகுத்ததாக ஆசிரியர் தெரிவித்துள்ளார் .

ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களையும் ஒருசேரத் திரட்டி ஓரிடத்தில் காணுமாறும் அமைத்துள்ளார். இதனுள் ஆங்காங்குச் சொற்களுக்கு ஏற்றவாறு 300 விளக்கப் படங்களையும் இனைத்துள்ளார். இந்த அகராதியின் முகவுரையில் தொகுப்பாசிரியர்.

" இது தமிழ்மொழி வளர்ச்சியில் விருப்புற்றவர்களுக்குத் தமிழ்த் தினசரி முதலிய சஞ்சிகைகளில் வெளிவரும் விடுகதை, பந்தனம், சித்திரப் போட்டிகள் முதலிய மனம் குதூகலமடையக்கூடிய போட்டிப் பந்தயங்களில் கவர்ச்சியுள்ளவர்களுக்கும் இலகுவாக விடைகளைத் தெரிந்துகொள்வதற்குத் தகுந்த சாதனமளிக்கக்கூடிய தமிழ் அகராதியாகும் . இதுகாறும் இவ்விதமான அகராதிகள் வெளிவராமல் தமிழ்ப் போட்டிப் பந்தயங்களில் வெற்றி பெறுவதற்குத் தமிழன்புடையோர் பட்ட கவலைகள் இதனால் நிவர்த்திக்கப்படும் . ஆதலால் , தமிழ்ப்பற்றுடைய அன்பர்கள் ஒவ்வொருவரும் இவ்வரிய தமிழ்ப் போட்டிப் பந்தய நூதன அகராதியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம் ."