முகப்புதொடக்கம்

xix


என்று தெரிவித்துள்ளார். இந்த அகராதி வெளிவந்த ஆண்டு தெரியவில்லை. ஆனந்தவிகடன் முதலிய பருவ இதழ்களில் போட்டிப் பந்தயங்கள் வந்த காலத்தை ஒட்டியதாய் இருத்தல் வேண்டும்.

பலதுறை அகராதி:

சோதிடமும் மருத்துவமும் தமிழ்ச் சமுதாயத்தோடு இணைந்துவருவன.அந்நாளில் தமிழ்ப் புலவர்களுள் பலர் சோதிடம், மருத்துவம் ஆகியவற்றிலும் வல்லவராயிருந்தனர். சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றனார், மருத்துவன் தாமோதரனார் என்னும் பெயர்கள் இவ்விரு கலைகளிலும் முறையே சிறந்தமைபற்றி வந்த சிறப்புப் பெயர்களாகும். மருத்துவத்தில் ஈடுபட்டாரையும் 'பண்டிதர்' என்றே வழங்கத் தலைப்பட்டனர். எனவே, இவைபற்றிய கருவிநூல்களும் அகராதிகளும் சென்ற நூற்றாண்டில் தோன்றலாயின. கால நிகண்டு, பதார்த்தகுண சிந்தாமணி, அறுபது வருட பலன், காலசக்கரம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. சோதிடம் தொடர்பான சொற்கோவைகளையும் செய்திகளையும் விளக்கிச் 'சோதிடக்கட லகராதி' என ஓர் அகராதி நூல் சென்ற நூற்றாண்டில் அச்சில் வந்தது. வடலூர் இராமலிங்க வள்ளலார் 'ஒளஷதகுண அகராதி' என்னும் நூலை இயற்றியுள்ளார். ஏமதத்துவம் என்னும் பஞ்சகாவிய 'நிகண்டு' என்னும் ஒரு மருத்துவ நிகண்டும் உள்ளது. 'தட்சநாயனார் வைத்திய அட்டவணை', 'வைத்திய மலையகராதி', 'மூலிகையகராதி', 'வாகட அகராதி' என்பன மருத்துவம்பற்றிய அகராதிகளாகும்.

இந்த நூற்றாண்டில் தோன்றிய மருத்துவ அகராதிகளுள் மிகப் பெரியது டி. வி. சாம்பசிவம் பிள்ளை என்பார் தொகுத்து வெளியிட்ட மருத்துவக் கலைச்சொல் அகராதி. இஃது ஐந்து பெருந்தொகுதிகளாக உள்ளது. இதில் தமிழ் மருத்துவ நூல்களுள் வரும் சொற்கள், மருத்துவப்பெயர்களை எல்லாம் அகரவரிசையில் தந்து அவைபற்றிய விளக்கம் எழுதியுள்ளார். இரண்டு பத்தியாக நூலை அமைத்துத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அடுத்தடுத்து விளக்கம் அமைத்துத் தந்துள்ளார். தமிழ் மருத்துவ நூல்களை ஆராய்வார்க்கு இந்த அகராதி கலங்கரைவிளக்கமாய்க் காட்சி தருகிறது. சம்பிரதாய அகராதி என்பது வைணவ சமூகத்தினரிடையே வழங்கப்பெறுகிற சொற்களின் பொருள்களை விளக்கும் ஓரகராதியாகும். மேலும், குழுஉக்குறி போன்ற குறியீடுகளை உள்ளடக்கிப் பரிபாஷையகராதி என ஓரகராதியும் வெளிவந்ததாகத் தெரியவருகிறது. கிறித்தவ சமயச் சார்பாக வந்துள்ள 'கிறிஸ்துவ சமய பரிபாஷை', 'இறையியல் சொல்லகராதி' என்பனவும் குறிபிடத்தக்கன.

பழமொழி அகராதி:

தமிழ்நாட்டில் சங்ககாலம் தொடங்கி இந்நாள்வரை மக்களின் வாய்ப்பிறப்பாக வழிவழி வழங்கிவரும் பழமொழிகள் பல்லாயிரக்கணக்கானவை. பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகிய முன்றுறையரையனார் இயற்றிய பழமொழி நானூறு, நானூறு பழமொழிகளின் விளக்கமாய் அமைந்ததே. திருநாவுக்கரசர் அருளிய பழமொழித் திருநேரிசைப் பதிகத்துள் ( 4 : 5 ) பத்துப்பாடல்களிலும் பழமொழிகளை அமைத்துப் பாடியுள்ளார். தண்டலையார் சதகம் என்னும் பின்னாளைய நூறு பாக்கள்கொண்ட நீதிசதகமும் பழமொழி விளக்க நூலே. பெரும்புலவர் காவியங்களில் பழமொழிகளும் ஆங்காங்கே பயிலக் காண்கிறோம்.

ஜான் லாசரஸ் என்பார் தமிழகப் பழமொழிகளைத் தொகுத்து அகராதி அடைவில் தந்து ஆங்கில விளக்கமும் உடன்சேர்த்து 1894-ல் வெளியிட்டார். இந்தத் 'தமிழ்ப் பழமொழி அகராதி' ஒரு பழமொழிக் களஞ்சியமாகும்.

இதன்பின் ஹெர்மன் ஜான்ஸர் என்பார் பழமொழிகளைப் பொருள் அடைவில்  வகைப்படுத்தித் தொகுத்து வெளியிட்ட தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூல் 1897-ல் வெளிவந்தது.

திருமணம் செல்வக்கேசவராய முதலியார் 'உவமச்சொல் அகராதி' என்னும் பெயரில் சிறப்பான பழமொழிகளைத் தொகுத்து அவற்றிற்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளுடன் சிற்றகராதி ஒன்றைத் தந்துள்ளார்.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராய் விளங்கிய எஸ்.அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் பன்னீராயிரம் பழமொழிகள் கொண்ட