முகப்பு | தொடக்கம் |
xx |
அகராதித் தொகுப்பினை நல்கியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரும் பழமொழித் தொகுப்பு ஒன்று தந்துள்ளனர். அண்மையில் (1984) திருமதி மீனாட்சிசுந்தரம்
என்பவர் 'கொங்குப் பழமொழிகள்-ஓர் ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். இதில் கொங்குநாட்டில் வழங்கும் 1263 பழமொழிகள் அகரவரிசையில் ஆங்கில விளக்கங்களுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இலக்கியத் தொடர்பான அகராதிகள்: இலக்கியங்களில் வரும் சொற்பொருள்களை விளங்கிக்கொள்வதற்கு அவ்வவ் இலக்கியத்தில் பயின்றுவரும் அருஞ்சொற்பொருள்கள் அறியப்படவேண்டும். டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த நூல்களில் சிறப்புக்கூறாக அமைந்து காணப்படுவது ' அரும்பதம் முதலியவற்றின் அகராதி 'என்னும் இணைப்புப் பகுதியாகும். இவர் பதிப்பித்த சீவகசிந்தாமணி, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களில் உள்ள அகராதிகள் இங்குக் கருதத்தக்கன. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியின் தொடக்கமுதல் அந்த அகராதி நிறைவேறுவதுவரை தலைமைத் தமிழ்ப் பண்டிதராக விளங்கியவர் பேராசிரியர் மு.இராகவையங்கார் ஆவார். இவர் குறுந்தொகை, இறையனாரகப்பொருள் முதலிய சில நூல்களிலுள்ள அரும்பதங்களையும் பொருள்களையும் அகராதியின் பயன்பாட்டிற்காகத் தொகுத்து வந்தார். இவர் தொகுத்த இந்த அகராதிச் சொற்களை உள்ளடக்கி வெளியிடப் பெற்றது 'பொருட்குறிப்பகராதி' என்னும் நூல். சங்கநூல்களுக்குப் பதப்பிரிப்புக் குறியீட்டு விளக்கங்களுடன் குறைந்த விலையில் கண்கவர் வனப்புடன் அழகுற அச்சிட்டு வழங்கிய மர்ரே ராஜம் அவர்கள் அவற்றில் இடம் பெற்ற அருஞ்சொற்களுக்கான விளக்கங்களையும் சிற்சில பொருள் அடைவுகளையும் கொண்ட 'பாட்டும் தொகையும்' என்னும் தொகுதியை வெளியிட்டார். இது 'சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்' என்று போற்றத்தக்க சிறப்புடன் திகழ்கிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய 'சேந்தன் செந்தமிழ்' நூலுள் 'அகரமுதல்' என ஒரு பகுதி உள்ளது. இதில் நூலுட் கண்ட 2456 சொற்களுக்கு அகரவரிசையில் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந் நூல் தமிழின் தனிபெருஞ் சிறப்பை எடுத்துக்காட்டும் பொருட்டு அடிகளாரால் இயற்றபெற்றது. இந் நூலின் இரண்டாம் பதிப்பு (1965) முகவுரையில் டாக்டர் மு. வரதராசனார் அடிகளாரின் நோக்கத்தை நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். 'மங்கலம்' என்பது வடசொல். வடமொழியின் சொற்கள் கலவாமலே 'சேந்தன் செந்தமிழ்' என்ற நூலும் அதன் உரையும் அமையவேண்டும் என்று விரும்பியது அடிகளின் திருவுளம். அதற்கு ஏற்பவே 'மங்கலம்' என்ற வடசொல்லை நீக்கி 'நல்' என்ற சொல்லை அமைத்து, 'நல்வழக்கு' என்று எழுதியுள்ளார். இந் நோக்கம் அடிகளின் முன்னுரையைக் கற்போருக்குத் தெளிவாகும். இவ்வாறு ஒரு நூலும் உரையும் அமைந்த அமைப்பு இது வரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லை எனலாம். 'நடுநிலைமை இன்றி, தவறானதொரு பற்றுக்கொண்டு, வடமொழியே உயர்ந்தது என்றும், தெய்வத்தன்மை உடையதென்றும் சிலர் மயங்கித் தடுமாறி எழுதியும் பேசியும் வந்த போக்கை உணர்ந்த அடிகள் அவர்களைத் திருத்தவும், அவர்களின் மயக்கத்திற் சிக்காமல் பிறரைக் காக்கவும் விழைந்து முன்வந்து செய்த புலமைத்தொண்டு இது.' பொருள்விளக்க அகராதிகள்: தமிழ் நூல்களில் வரும் சிறப்புப் பெயர்களின் விளக்கமாய் அமைந்த அகராதிகளும் சில உள. இவற்றுள் முதலாவதாகக் குறிபிடத்தக்க நூல் யாழ்ப்பாணம் ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை 1902-ல் வெளியிட்ட அபிதான கோசம். அபிதானம் என்றால் பெயர் என்பது பொருள்; கோசம்-தொகுப்பு. சிறப்புப் பெயர்களின் விளக்கங்கொண்ட நூல் என்பதாம். விநாயகர், கலைமகள், திருமகள் முதலிய தெய்வங்களின் பெயர்களையும் பல்வேறு நூல்களிலிருந்து எடுத்து அகர வரிசையில் வெளியிட்டுள்ள திரு. மு. சதாசிவனாரின் 'விநாயகர் அருட்செல்வம்', 'கலைமகள் அருட்செல்வம்', 'திருமகள் அருட்செல்வம்' என்பனவும் இவ்வகையினைச் சாரந்தனவே. |
![]() |
![]() |
![]() |