முகப்பு | தொடக்கம் |
xxi |
சிறப்புப் பெயர்களுக்கு என வெளிவந்த தனியான ஒரு பெரிய அகராதி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தொகுத்தளித்த ' சிறப்புப் பெயர் அகராதி ' ஆகும். 1908-ல் இந்த அகராதி வெளிவந்தது. தமிழ்ப் பண்டிதர் ஆ. சிங்காரவேலு முதலியார் சிறப்புப் பெயர்கள்பற்றிய விரிவான விளக்கங்கள் அமைந்த ஒரு பெருநூலை 'அபிதான சிந்தாமணி' என்னும் பெயரில் தொகுத்து அமைத்தார். இந் நூற்பெயர் 'அபிதான கோசம்' என்னும் முன்னூலை அடியொற்றியதாகும். அபிதான சிந்தாமணியைக் ' கதையகராதி ' என்றும் அறிஞர் புகழ்ந்து போற்றினர். இதன் சிறப்பினை உணர்ந்து மதுரைத் தமிழ்ச்சங்க தலைவராய் விளங்கிய பொன். பாண்டித்துரைத் தேவரவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ல் வெளிவரச் செய்தார். இதன்பின் நூலாசிரியர் சேர்த்த பொருள்களும் புதுவிளக்கங்களும் கொண்ட இதன் இரண்டாம் பதிப்பினைச் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ் வெளியீட்டாளர் 1934-ல் அழகுற அச்சிட்டு வெளிப்படுத்தினர். இப் பெருநூல் இப்பொழுது தில்லி ஆசியன் பதிப்பகத்தாரால் ஒளிப்படப் பதிப்பாக வெளியிடப்பெற்று உலவிவருகின்றது. இந்த வகையில் நவீன முறையில் வந்த பெருநூல் 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' வெளியிட்ட பத்துத் தொகுதிகளையுடைய 'தமிழ்க் கலைக்களஞ்சியம்' ஆகும். மேலும், இவர்கள் அடுத்து வெளியிட்ட 'குழந்தைகள் கலைக்களஞ்சியமும் ' பத்துத் தொகுதிகள் கொண்டுள்ளது. இவ்விரு தொகுப்புகளும் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெரும் படைப்புகளாகும். தொகைப் பெயர் விளக்கம்: தொகைப்பெயர் விளக்கமான ஓர் அகராதியை வீரமாமுனிவர் 1732ஆம் ஆண்டிலேயே தாம் படைத்த சதுரகராதியில் மூன்றாவது அகராதியாக அமைத்தார். இப் பகுதி பின்னர் வந்த தமிழகராதிகளிலும் தொடர்ந்து வந்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி முதலியவற்றில் மேலும் பெருக்கமும் விளக்கமும் பெற்றது. குடுமியாமலைச் சுப்பிரமணிய பாரதி ' பொருட்டொகை நிகண்டு 'என நூற்பாவினால் ஒரு நூலைப் படைத்தார். இதனை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின்வழிச் சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர் வெளியிட்டுள்ளார். இத்தகைய முந்திய நூல்களை அடியொற்றி உரைநடையில் ' தொகை அகராதி ' என்னும் தொகுதியைச் சு. அ. இராமசாமிப் புலவர் ஆக்கியுள்ளார். இதனை 1969-ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர். இலக்கியத் தனியகராதிகள்: பொதுவான அகராதிகள் ஒருபாலாகத் தனித்தனி இலக்கியங்களுக்கு முழுமையான அகராதிகளும் பல வெளிவந்துள்ளன. புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு முதலிய சங்கநூல்கள் தனித்தனி அகராதித் தொகுப்புகளாகப் பொருள் விளக்கங்களுடன் வெளிவந்துள்ளன. சங்கநூல்கள் முழுமைக்குமான ஒரு சொல்லடைவை மகாவித்துவான் முதுமுனைவர் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் தொகுத்து அமைத்தார். 'சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்' என்னும் பெயரில் 'அ' முதல் 'ஒள' வரையிலான முதற்பகுதி மட்டும் வெளிவந்தது. பிற்பகுதிகள் அச்சுருப் பெறவில்லை. புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சுக் கலைக்கழகம் 'பழந்தமிழ்ச் சொல்லடைவு ' என்பதை மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இது சங்க நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், இறையனார் களவியல், முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நாற்பத்தொரு நூல்களிலும் இடம்பெற்ற அனைத்துச் சொற்களுக்குமான பெருந்தொகுப்பாகும். திருக்குறளுக்கு மார்க்கசகாயஞ்செட்டியார் என்பார் முதன்முதலாகச் சொல்லகராதி தொகுத்து வெளியிட்டார். இவர் ஆக்கிய 'திருக்குறள் சொற்குறிப்பு அகராதி' 1942-ல் வெளிவந்தது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு என்பவற்றை முறையே மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்களும் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் அவர்களும் சிறப்புறப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் |
![]() |
![]() |
![]() |