முகப்புதொடக்கம்

xxxi


ஒருபொருள் தரும் சொல்வடிவங்கள் அகரவரிசையில் அடுத்தடுத்து வரும்பொழுது இணைப்பு வளைவுக் குறியீட்டால் சேர்த்துக்காட்டி, அவற்றிற்கு ஒருசேரப் பொருள்விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

(எ - டு)
அக்காரடலை, } சருக்கரைப்பொங்கல்.
அக்காரவடிசில்
ஆலமர்கடவுள், } கல்லால மரத்தின்கீழ்த் தென்முகக் கடவுளாய் வீற்றிருக்கும் சிவன்.
ஆலமர்செல்வன்
இடக்கரடக்கல், } பலர்முன் கூறத்தகாத சொற்களை
மறைத்துக்கூறல்.
இடக்கரடக்கு
உயிரளபு, } தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து.
உயிரளபெடை

ஒருபொருள் குறித்த வடிவ வேறுபாடுடைய சொற்கள் அகரவரிசை முறையில் வெவ்வேறிடங்களில் அமைதல் இயல்பு. இவ்வகையான பொருள் தொடர்புடைய சொற்களுள் முதல் மூலச்சொல்லுக்கு மட்டும் பொருள் தரப்பட்டிருக்கும் . ஏனைய மாற்று வடிவங்களைத் தரும்போது அவற்றின் பொருளுக்கு முதற்சொல்லைக் 'காண்க' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

(எ-டு)

அச்சாரம் காண்க அச்சகாரம்.
அல்லம் காண்க இஞ்சி.
ஆட்டாங்கள்ளி காண்க திருகுகள்ளி.
உருவங்காட்டி காண்க உருக்காட்டி.

ஓரெழுத்தால் வடிவம் வேறுபடும் ஒருபொருள் குறித்த சொற்கள் வரும்போது அகர வரிசையில் மாற்றெழுத்து வளைவுக்குறிக்குள் தரப்பட்டிருக்கும். இதனால் வேற்றெழுத்து மாற்றமுடைய தனி வடிவத்தைச் சுருக்கிக் காட்டும் தன்மை காணப்படுகிறது.

(எ-டு)
அங்கி(கீ)காரம்,
அடைக்கலக்(ங்)குருவி,
அமிர்(ழ்)து,
காண்டி(டீ)ப(வ)ம்

போல்வன காண்க. இதனால் அடுத்தடுத்து ஓரெழுத்து மாற்றச் சொல்வடிவம் தரப்படுதல் தவிர்க்கப்படுகிறது. 'காண்க;' என்று அடுத்தடுத்து எடுத்துக்காட்டும் நிலைமையும் தவிர்க்கப்படுகிறது.

இந்தத் தளத்தில் இவை இருவேறு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

(எ-டு)

அங்கி(கீ)காரம்

இது

அங்கிகாரம்
அங்கீகாரம்

என இரு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பொருள் உரைக்குமிடத்து ஒரு தலைச்சொல் குறைச்சொல்லாயின அதன் முழுவடிவமும் முதலில் தந்து, பின் பொருள் விளக்கப்பட்டிருத்தலும் உண்டு. (எ-டு) அக்களிப்பு - அகக்களிப்பு, மனமகிழ்ச்சி.

ஆண் பெண் வேறுபாட்டை விளக்கிக்காட்ட அவ்விருபால் விகுதிகளும் உடன் இட்டுக்காட்டப்பெறுகின்றன. (எ-டு) செருக்குள்ளவன்(ள்).

வினைச்சொற்கள் ஏனைய அகராதிகளிற்போலத் தொழிற்பெயர் வடிவிலேயே தரப்பட்டிருக்கின்றன. வினையடியாய் வரும் ஒரு சொல்லும் அதே வடிவமுடைய பெயரும் தனித்தனி சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அடி என்பது பாதம், காற்சுவடு, முதல், கடவுள் என்று இவ்வாறு பலபொருள் தரும் பெயர்ச்சொல் . இப் பெயர்ச்சொல்லை அடுத்து அடி என்னும் வினைப்பகுதித் தலைச்சொல் வரும்போது சொல்லின்பின் (வி) என்பது வினை என்பதனைக் குறிப்பதற்காக வளைவுக் குறிக்குள் தந்து இனம்பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.