பக்கம் எண் :
 

பொருத்தவியல் 7

     (கு - ரை). குற்றெழுத்து - உயிர்க்குறில். அவ்வகையே-நெட்டுயிரைப்
போலப் பெண்பாலாகும். (7)


சமநிலை, வியனிலை
  
8. *சாற்றுந் தலைவ னியற்பெய ருக்குத் தகும்வகையே
தோற்றும் வியன்வரி லானந்த மாகுஞ்சொல் லாவெழுத்தாம்
ஏற்ற வெழுத்து வரினு மிசைந்த தியற்பெயர்க்கே
ஆற்றும் பொருத்த மனைத்துஞ் சமநிலை யாமென்பரே.

     (உரை II). எ-து, உண்டிப்பொருத்தம் ஆமாறுணர்த்......று

     பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் முதலெழுத்து முதலாகத் தொட்டு
அவன் பேர் பிரபந்தச் செய்யுளின் முதலெழுத்தளவும் எண்ணி வந்தால்
சமநிலையாகில் உத்தமம், வியனிலையாகில் ஆகாதென்று சொல்லுவர் புலவர்.

     (கு - ரை). ஆனந்தம் - குற்றம். சொல்லா எழுத்து - முதன்
மொழிக்குச் சொல்லத் தகாத எழுத்து. சமநிலை, வியனிலை : சூ.5. I
உரைப்பிரதியில் இச் சூத்திரம் வேறு உருவில் அமைந்துளது; சூ. 82. (8)

நஞ்செழுத்தும் அவற்றின் இயல்பும்
 
9. +கூறு மளபு மகரக் குறுக்கமும் யரலவின்
ஏறுமா வோவும் யரலவொற் றோடுமேழ் நெட்டெழுத்தும்
வேறுள வாய்தமும் நஞ்செழுத் தாகும்வெற் பாதிபத்தின்
ஈறு முதலு மியலப் பெறாவென்பர் ஏந்திழையே.

     (உரை - I). எ - ன். நஞ்செழுத்தாமாறும் அவற்றின் இயல்பும்
உணர்த்.........று.

     அளபெடையும் மகரக் குறுக்கமும் யா, ரா, லா, யோ, ரோ, லோ
எழுத்தும் (பதினெட்டு) ஒற்றும் நெட்டுயிர் ஏழும் ஆய்தமும் என இவை
நஞ்செழுத்தாம். (இவை) பாட்டுடைத் தலைமகன் தசாங்கத்தயல் வரப் புணரப்
பெறா; எ - று.

“நஞ்செனப் படுமவை ஒப்புட னிற்பின்
துஞ்சுதல் கெடுதலெனச் சொல்லினர் புலவர்.”

இவற்றுள் நெட்டெழுத்தேழும் சொன்னாராயினும் எல்லார்க்கும் உடன்பாடன்று.