105. தும்பையின் வகை
நிலைபாழி கோளொடு வாளாட் டுடைபடை நீள்களிற்றின்
தொலையார் மலைவிவை தும்பை விகற்பங்கள் தொன்மைமிக்க
தலையாய நூலவை தன்னினுங் கண்டிங் கொழிந்த வெல்லாஞ்
சிலையாரு நன்னுதல் மாதே! அறிந்துகொள் செப்பிடவே.
(இ-ள்.) இவை தும்பை விகற்பமாம் (எ-று.)
நிலையாவன, தானை, யானை, குதிரை, தேர் இவற்றின் நிலை.
பாழிகோளாவது, கைப்படை விடுத்து மெய்கொண்டு பொருந்தறுகணாளர் ஏமப்பெருமை.
வாளாட்டமாவது, முரண் தேர் சூழ்ந்த களிற்றினத்தொடும் பட்ட வேந்தனையட்ட வேந்தர் தாமும் மறவரும் ஆடும் பொலிவு.
உடைபடையாவது, ஒருவர்க்குப் பல படைத் தலைவன் வாளினால் ஓச்சப்பட்ட உடைபடைத் தொகுதி. அதற்கு நூழில் என்றும் பெயராம்.
களிற்றின் தொலையார் மலைவாவது, களிற்றொடு மலைதலும் படுதலும் எனவிவை; பிறவுமன்ன.
(20)
106. பாடாண் வகை
புகட்சி பரவல் குறிப்புக் கொடிநிலை கந்தழியே
இகட்சி மலிவள்ளி யென்றிவை யாறு நெறிமுறையில்
திகட்சி மலைதரு பாடாண் பகுதிசெப் பாதனவும்
இகட்சியுண் டாகா வகைதேர்ந் தறித லியல்புடைத்தே.
(இ-ள்.) புகட்சி, பரவல், குறிப்பு, கொடிநிலை, கந்தழி, வள்ளி என்றாறும் பாடாண் பகுதி விகற்பமாம். (எ-று.)
புகட்சியாவது, புகழ்.
பரவலாவது,
"எனவாங்கு,
அகலி லாநின் றடியிணை பரவுதும்
பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன்
மலர்தரு பார்மிசை மன்னுவோ னெனவே."
என வரும்.
குறிப்பாவது, நன்மை வேண்டின் தெய்வத்தை வழிபடும் என்பது.