பக்கம் எண் :
 
285

குறிப்புரை

பாயிரம்

பாயிரப்பாட்டுக்களுக்கு உரையாசிரியரால் உரை எழுதப்பெறாமையின் ஈண்டு அவற்றிற்கு உரை எழுதப் பெற்றது.

1.(இதன் பொருள்) 'விண்ணுலகினும் மண்ணுலகினும் உள்ள யாவரினும் மேலானவனும், அரசமரத்தினது நீழலிலே மேன்மையும் தகுதியும் வாய்ந்து வீற்றிருந்தவனும், தொகுதியான உண்மையாகிய தவத்தினாற் கூடப் பெற்றவனும், எவ்வளவு சிறந்த ஞானிகளாலும் இத்தன்மையை உடையன் என மனத்தினால் கருதவும் மொழியினாற் சொல்லவும் எட்டாதவனும், இயல்பாகவே மும்மலங்களினின்று நீங்கி இருப்பவன் ஆதலின் தூயன் என்று சொல்லத்தக்கவனுமாகிய புத்ததேவனுடைய திருவடிகளாகிய மலர்களைத் தலையிலே அழகாகச் சூடிக்கொண்டு தமிழ் இலக்கண நூலைக் கூறப்புக்கவன் யார்?' எனில், பசுமையாகிய சோலைகளாற் சூழப்பட்ட பொன் பற்றி என்னும் ஊருக்குத் தலைவனாகிய புத்தமித்திரன் ஆவன் (எ-று.)

2. (இ-ள்.) 'எல்லோராலும் ஆராய்ந்து அறிதற்குரிய சிறந்த குணங்களை உடைய அவலோகிதரிடத்து அகத்திய மகா முனிவர் தமிழ் இலக்கணங் கேட்டு அத்தமிழ் இலக்கணத்திற்குரிய தமிழ்மொழி வழங்கும் இந்நாட்டில் உள்ளாருக்காக அவர் இயற்றிய குளிர்ந்த தமிழ் இலக்கணத்தின் பொருளை வேறொரு நூலாகச் சுருக்கிக் கூற (அந்நூலைக் கற்றறிந்தோர் பலர் உள்ள இந்நாட்டின்கண் புன் புலமையுடையவனாகிய) நீயும் இருக்கின்றாயோ?' என்று (ஏந்திய ஆபரணங்களை உடையாள்) கேட்பாளாயின், (பறவைகளுக்குட் சிறந்த) கருடன் பறக்கும் பெரிய ஆகாயத்தில் (மிகச் சிறிய) ஈக்களும் பறவா நிற்கின்றன; இதனைக் குற்றமாகக் கொள்வாருளரோ?