என்று நான் மறித்துக் கேட்பின்) இதற்கு ஏந்திழை என்ன மறுமொழி கூறுவாள்? (எ-று.)
அவலோகிதர் பௌத்த மதப் பெரியார்களுள் ஒருவர். வருவிக்கப்பட்ட சொற்கள் இசையெச்சங்கள். இச்சொற்கள் இச்செய்யுளிற் கூறப்பட்ட உபமானத்துக்கு ஏற்ப வருவித்துரைக்கப்பட்டன. 'கொல், ஓ' என்பன அசைகள்.
'பறவைகளுட் சிறந்த கருடன் பறக்கும் பெரிய ஆகாயத்தில் மிகச் சிறிய ஈக்களும் பறத்தல் போல, அறிஞர்களுள் சிறந்தவராகிய அகத்திய மகா முனிவர் இலக்கணம் இயற்றிய பெரும்பொருட் பரப்பினையுடைய தமிழ்மொழியிலே சிற்றறிவினனாகிய யானும் இலக்கணம் இயற்றினேன்; இதில் யாது குற்றம்?' என்பது கருத்துப் பொருள்.
தமிழ் என்றது, தமிழ் மொழியை உணர்த்தி நின்றது. ஈண்டு அஃது அதன் இலக்கணத்தை உணர்த்தியது; இது பொருளாகு பெயர்.
3. (இ-ள்.) சான்றோர்களின் பாக்களிற் பொருந்திவரும் இன்பத்தைக் கொண்டுள்ள சிறந்தனவாகிய எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணம் என்னும் ஐந்து இலக்கணங்களையும் கூறும் பரவிய ஐந்து அதிகாரங்களையும் சுருக்கி அவற்றுடன் இடையிடையே வடநூன்மரபையும் புகன்றுகொண்டு தேனானது பொருந்திய வெற்றி மாலையையும் தேர்ச் சேனையையும் உடைய வீரசோழனுடைய திருப்பெயராலே இத்தமிழ் உலகின்கண் ஒரு நூலாக இயற்றுவேன் (எ-று.)
'பாமேவு, நாமேவு, நல்' என்பனவற்றைப் 'பஞ்ச அதிகாரம்' என்பதனோடு இயைக்க. ஈண்டு 'அதிகாரம்' என்றது பல இயல்களின் தொகுதியைக் குறித்து நின்றது என்க. சேனாவரையர் தொல்காப்பியம், சொல்லதிகாரத்தின் முதற் சூத்திரத்து விசேட உரையில் 'அதிகாரம் என்னுஞ் சொற்குப் பொருள் பலவுளவேனும், ஈண்டு அதிகாரம் என்றது ஒரு பொருணுதலி வரும் பலவோத்தினது தொகுதியை என்க,' என்றதனை ஈண்டு நோக்குக. இவ்விலக்கணம் மிகுதி பற்றியதாம் என்க. என்னெனின், சில நூற்களுள் ஒவ்வோரியலே ஒவ்வோரதிகாரமாக அமைதலும் உளது ஆகலின் என்க.