மறைப் பொருளது எனவும்; து ஒன்றன் படர்க்கை விகுதி எனவும்; நடவா என்பதில் ஆவே எதிர்மறைப் பொருளதாகியும் விகுதியாகியும் வந்தது எனவும் கூறப்படும்.
நடவான் என்பது முதலிய நான்கினும் ஆன், ஆள், ஆர், ஆர்கள் என்பனவே எதிர்மறைப் பொருளைத் தருவனவாயின், நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தார்கள் என்பவற்றினும் அவை எதிர்மறைப் பொருளைத் தருதல் வேண்டும். 'நடந்தான் என்பது முதலியவற்றுள் காலமுணர்த்தும் எழுத்து உண்மையின் எதிர்மறைப் பொருள் நீங்கிற்று' எனின், நடந்திலன், நடந்திலள் என்பன முதலியவற்றினும் எதிர்மறைப் பொருள் நீங்குதல் வேண்டும், அவற்றினும் காலமுணர்த்தும் எழுத்து உண்மையின் என்க. நடந்திலன், நடந்திலள் என்பன நடந்திலான், நடந்திலாள் எனவும் வரும் என்பதையும் நோக்குக. நடந்திலர் என்பது நடந்திலர்கள் முதலிய மற்றவற்றினும் இங்ஙனம் வருவனவற்றை அறிந்துகொள்க. இனி நடந்திலன் என்பது முதலியவற்றுள், இல் எதிர்மறைப் பொருளது எனவும், அன் முதலியன விகுதிகள் எனவும் கூறப்படும் என்றறிக.
தாதுப்படலக் குறிப்புரை முற்றிற்று.
6. கிரியா பதப் படலம்
இந்நூலாசிரியர் இப்படலத்தின் முதற்பாட்டில், 'படர்க்கையில் ஆண். பெண், பலர், ஒன்று, பல, சிறப்பு என்பனவற்றை அமைத்து, அவற்றை முக்காலங்களாற் பெருக்கின், படர்க்கை வினைமுற்றுக்கள் பதினெட்டாம்' எனவும்; இரண்டாம் பாட்டில், 'தன்மை வினைமுற்றிலும் முன்னிலை வினை முற்றிலும் ஒருமை, பன்மை, சிறப்பு என்பனவற்றை அமைத்து, அவற்றை முக்காலங்களாற் பெருக்கின், தன்மை வினைமுற்று ஒன்பதும், முன்னிலை வினைமுற்று ஒன்பதுமாகி, அவ்விருதிறமுங் கூடிப் பதினெட்டாம்' எனவும்; 'அம்முத்திறமுங் கூட வினைமுற்றுக்கள் முப்பத்தாறாம்' எனவுங் கூறினர்.
நன்னூலாசிரியர், நன்னூல் வினையியல் ஐந்தாஞ் சூத்திரத்தில் படர்க்கை இடத்தில் ஐந்து பால்களையும், தன்மை முன்னிலை இடங்களில் ஒருமை பன்மைகளையும் அமைத்து