எழுத்ததிகாரம் | 11 | முத்துவீரியம் |
மென்மையின்
மறுபெயர்கள்
17. மென்மைமென் கணமெலி
மெல்லெழுத் தாகும்.
(இ-ள்.) மென்மையெனினும், மென்கணமெனினும்,
மெலியெனினும்
மெல்லெழுத்தென்னும் ஒருபொருட்கிளவி. (17)
இடையெழுத்து
18. இடையெழுத் தென்மனார்
யரல வழள.
(இ-ள்.) ய, ர, ல, வ, ழ, ள
ஆறும் இடையெழுத்தாகும். (18)
அதன் மறுபெயர்கள்
19. இடைமை யிடைக்கண
மிடையிடை யெழுத்தே.
(இ-ள்.) இடைமையெனினும்,
இடைக்கணமெனினும், இடையெனினும்
இடையெழுத்தென்னும் ஒருபொருட்கிளவி. (19)
இனவெழுத்துக்கள்
20. உயிர்முதன் முப்பது
மொன்றற் கொன்றினம்.
(இ-ள்.) அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ,
ஏ, ஐ, ஒ, ஓ, ஒள-க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப,
ம, ய, ர, ல, வ, ழ,
ள, ற, ன ஆகிய முப்பதெழுத்துக்களுள், குறிலுக்கு
நெடிலும்
வல்லினத்துக்கு மெல்லினமும் இனமாகும்.
இடையினத்துக்கு இனமிலவா மென்றுணர்க. (20)
ஐ ஒள என்பவற்றுக்கினம்
21. அவற்றுள்,
இ, உ, ஐ, ஒளக் கினமென
மொழிப.
(இ-ள்) முற்கூறிய
முப்பதெழுத்துக்களுள் ஐகாரத்துக்கு இகரமும்,
ஒளகாரத்துக்கு உகரமும் இனமாகும். (21)
(வரலாறு.) ஐ, இ; ஒள, உ.
சார்பெழுத்தின் வகை
22. சார்புயிர் மெய்தனி
நிலையிரு பாலன.
|